பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை 6) காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் காலை ராமாபாய் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, ‘இக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும்.
தற்பொழுது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் மாநில தலைவர் கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதனால் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கொலையின் பின்னணிகளை கண்டறிய வேண்டும்
காவல் துறையின் உளவுத்துறை பிரிவின் தோல்வியால் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் உளவுத்துறை ஏடிஜிபியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் பகுதியில் பிரதான சாலையில் போராட்டம் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு வருபவர்கள், வெளியூர் செல்ல ரயில் நிலையத்துக்கு வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், இதில் உடன்பாடு ஏற்பாடு ஏற்படவில்லை.
உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதுவரை போராட்டத்தையும் கைவிட மாட்டோம், ஆம்ஸ்ட்ராங் உடலையும் வாங்கமாட்டோம் எனக் கூறி வருகின்றனர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆம்ஸ்ட்ராங் கொலை…உளவுத் துறை செயலிழந்துவிட்டதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி!