மதத்தின் அடிப்படையில் மனிதனின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது தவறு என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 3) கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இந்திய அரசியலமைப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “அதுவே தவறு என்கிறேன். மதத்தின் அடிப்படையில் மனிதத்தை, மனிதனின் எண்ணிக்கையை கணக்கிடுவது தவறு.
மதம் மாறி கொள்ளக் கூடியது. ஆனால் மொழி இனம் மாறாது. என் தம்பி யுவன் சங்கர் ராஜா நேற்று யார்? இன்று யார்?. ஏ.ஆர்.ரகுமான் யார்? நேற்று பெரும்பான்மை இன்று சிறுபான்மையா?
கேவலமா இல்லையா உங்களுக்கு. என்னுடைய அப்பா இளையராஜா பெரும்பான்மை. மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா?. போன வாரம் அவர் பெரும்பான்மை. இந்த வாரம் அவர் சிறுபான்மையா?
இந்த மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கா?. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்ற ஒன்று கிடையாது. எங்களுக்கு தமிழர்கள்.
எங்கள் கட்சியில் தெலுங்கர், பீகாரி, மலையாளி, கன்னடர் என எல்லாரும் இருக்கிறார்கள். அனைவருக்கும் சீட்டு கொடுத்துள்ளோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இட ஒதுக்கீடு என்ற ஒன்றுக்கு தேவைப்படுகிறது. எந்த தீண்டாமையை வைத்து கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ அதன் அடிப்படையில் திருப்பி கிடைக்க வேண்டும் என கொண்டு வரப்பட்டது தான் சாதிவாரி கணக்கெடுப்பு.
அதனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று கருதினால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிகளை வளர்ப்பதற்கு உதவாது” என்று பேசினார் சீமான்.
மோனிஷா
Comments are closed.