ராமேஸ்வரத்தில் நாளை (ஜூலை 28) துவங்கும் அண்ணாமலை நடைபயண துவக்க விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொள்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நாளை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார். இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று மின்னம்பலத்தில் முதன்முறையாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து துவங்கிய போது கூட்டணி கட்சியான திமுகவிலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது போல அண்ணாமலையின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினான அதிமுகவிலிருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்று அமித்ஷா விரும்பியுள்ளார்.
ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர் பங்கேற்பதால் அதில் ஸ்டாலின் பங்கேற்றார். அண்ணாமலை துவங்கும் யாத்திரையில் பங்கேற்கலாமா என்று அதிமுகவில் விவாதங்கள் நடந்தது.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று அழைக்காததாலும் நடைபயணத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுத்ததாலும் நடைபயண துவக்க விழாவில் எடப்பாடி செல்ல வேண்டாம், பிரதிநிதியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம் என்று அதிமுகவில் முடிவெடுத்திருப்பதாக அண்ணாமலை மீது கோபம்…அமித்ஷா நிகழ்வை புறக்கணிக்கும் எடப்பாடி என்ற தலைப்பில் இன்று (ஜூலை 27) மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அதனடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்