கோவை கார் வெடிப்பு நடந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இன்று (அக்டோபர் 31) காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கார்வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், ஜமெஷா முபீன் உயிரிழந்தார். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று கார் வெடிப்பு நிகழ்வு நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார்.
அந்த பகுதியில் இருந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக நிர்வாகிகளோடு சென்ற அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் பஜனை நிகழ்வில் பங்கேற்று கந்தசஷ்டி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து கோயில் பூசாரிகளிடம் கார் வெடிப்பு சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
முன்னதாக பாஜக சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பந்த் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்தனர்.
ஆனால் இதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, மாநில தலைமையால் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்குக் கட்சித் தலைமை அனுமதிக்கவில்லை. கோவை மாவட்ட பாஜகவினர்தான் அறிவித்திருக்கின்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பந்த் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச்சூழலில் அண்ணாமலை கோவை சென்று ஈஸ்வரன் கோயில் சாமி தரிசனம் செய்த நிகழ்வில், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

அண்ணாமலை கோவை வந்ததையொட்டி கோவையில் ஈஸ்வரன் கோயில் பகுதியில் அதிகளவிலான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாமி தரிசனத்தைத் தொடர்ந்து கோவை கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை செய்யவுள்ளார்.
பிரியா
Comments are closed.