அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இந்தசூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் “அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 80 சதவிகித விசாரணை நிறைவடைந்ததால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கக்கொள்ள முடியாது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்தநிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் விடுமுறை என்பதால் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
செல்வம்
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு: தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மாறுமா?