ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற அன்புமணி

Published On:

| By Selvam

anbumani welcome rajinikanth

மது அருந்த கூடாது என்று தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை கூறியிருப்பதை தாம் வரவேற்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் கசாலியின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியபோது,

“தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் ஆய்வு நடத்தியதில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆறு மாறி இருக்கிறது என தெரிய வந்துள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம், இனியாவது தமிழக அரசு இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். சென்னை கூவம் போல தாமிரபரணி மாறக்கூடாது.

தி.மு.க அரசு விவசாயிகளின் எதிரியாக செயல்பட்டு வருகிறது. என்.எல்.சி பிரச்சனை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்  பிரச்சனை இல்லை.

இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனை. இன்று மண்ணை அழித்துவிட்டால் நாளை நமக்கு சோறு கிடைக்குமா.

இந்த நிலம் காப்பாற்றப்படும் வரை பாமக கடுமையான போராட்டங்கள் நடத்துவோம். மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.  கையகப்படுத்தபட்ட நிலத்தை விவசாயிகளுக்கு அரசு ஒப்படைக்க வேண்டும்” என்றவரிடம்,

தனது ரசிகர்கள் யாரும் மது அருந்தகூடாது என்று ரஜினிகாந்த் பேசியது குறித்த கேள்விக்கு,

“ரஜினிகாந்த் பேசியதை வரவேற்கிறேன். தைரியமாக அவர் சொல்லி இருக்கிறார். இதுதான் பாமகவின் கொள்கை. இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

ரஜினிகாந்த் கூறிய கருத்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதை கடைபிடிக்க வேண்டும் இப்போதாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் அல்லது படிப்படியாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.

அண்ணாமலை நடைபயணம் குறித்த கேள்விக்கு, “நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, “தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது இது குறித்து நாங்கள் புகார் கொடுத்தால் கஞ்சா 4.0, 5.0 என நடவடிக்கை எடுத்து 2000 பேர் வரை கைது செய்வார்கள். அந்த 2000 பேரும் ஒரு மாதத்தில் வெளியே வருவார்கள்.

போதை பிரிவுக்கு 18,000 காவலர்கள் தேவைப்படுகிறது. இதற்கு அரசு தேவையான காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். போதை பழக்கங்களை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றவரிடம்

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கேள்விக்கு “தேர்தலுக்கு நிறைய காலம் இருக்கிறது. பாமக தேர்தல் நெருக்கத்திலேயே முடிவு எடுக்கும்.

எங்களுடைய நிலைப்பாடு 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ப கூட்டணியை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

“அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை” – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்துக்கான காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share