திருமயம் கோட்டை பைரவர் ஆலயத்தில் அமித்ஷா தரிசனம்!

Published On:

| By Selvam

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 30) புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் ஒரே நாளில் தமிழகத்திற்கு வருவது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, இன்று கன்னியாகுமரி வரும் மோடி ஜூன் 1-ஆம் தேதி வரை விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 3.20 மணிக்கு அமித்ஷா திருச்சி விமான நிலையத்திற்கு  வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு வந்த அமித்ஷா, சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அருகே உள்ள சத்தியகிரீஸ்வரர் ஆலயம், கோட்டை பைரவர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

இந்த மூன்று ஆலயங்களிலும் அமித்ஷாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 5.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருப்பதி கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார்.

அமித்ஷா வருகையை ஒட்டி திருமயம் பகுதியில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழை வர போகுதே – வானிலை மையம் கூல் அப்டேட்!

1 கோடி சம்பளம் ட்ரெண்ட் செட் முதல் ’வாம்மா மின்னல்’ காமெடி வரை… யார் இந்த சூர்ய பிரகாஷ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel