”10 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு நகராட்சி மன்றமே நடக்காத அரசாக அதிமுக இருந்தது” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலத்தை இன்று (ஜூலை 16) மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின் பேசிய எம்.பி. தயாநிதி மாறன், நடைபாதை மேடை அமைத்து தர வேண்டும் என்ற பல நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை மேடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வெளிவரும் மக்கள் சாலையை கடக்க மிகவும் கஷ்டப்பட்டனர். இதையடுத்து, எளிதில் மக்கள் சாலையை கடக்கும் வகையில் நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு நகராட்சி மன்றமே நடக்காத அரசாக அதிமுக இருந்தது. ஆனால் முதல்வர் தற்போது நேரடியாக களத்தில் சென்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வுசெய்து வருகிறார். மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடக்கிறது என குறைசொல்ல அனைவரும் துடிக்கிறீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்