சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் (ஜனவரி 10) நடைபெற்றது.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்தார். அப்போது அவர் மாஸ்க் அணிந்திருக்கவே, “என்னங்க வாய இறுக்கமா கட்டி வச்சிருக்கீங்க? என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “இருமலா இருக்கு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தான் இதை பத்தி கேட்கனும்” என்று சொல்ல அவையில் உள்ள அனைவரும் சிரித்தனர்.
தொடர்ந்து அவர், “அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன் தினம் திருச்சி மலைக்கோட்டையில் லிஃப்ட் வசதி செய்து தரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொன்னார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சேவூர் ராமச்சந்திரன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்டுள்ள மலைக்கோட்டையில் உள்ள ஜலகண்டேஷ்வரர் அபிராமியம்மன் கோவிலுக்கு ரோப் கார், லிப்ட் போன்ற வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், தொல்லியல் துறைக்கும், தமிழக அரசுக்கும் பெரிய சண்டை நடந்து கொண்டிருந்தது. அதனால் எங்கள் ஆட்சியில் கடைசி வரை அங்கு திட்டமிட்ட வசதிகளை செய்ய முடியவில்லை.
தற்போதுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். அவர் விரைவில் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு ரோப் கார், லிப்ட் வசதிகள் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “திமுக அரசு ஆட்சியில் அமர்ந்தபிறகு தான், அய்யர் மலை, சோளிங்கர் மலையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிடும் அபிராமி திருக்கோயிலில் ஏஎஸ்ஐ அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்தி வருகிறது. துறை செயலாளர் ஏற்கெனவே ஏஎஸ்ஐ அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.
விரைவில் முதல்வரின் உத்தரவை பெற்று, இந்த மாத இறுதிக்குள் திண்டுக்கலுக்கு வருகிறோம். நீங்களும் வாருங்கள். இருக்கின்ற பிரச்சனையை அதிகாரிகளுடன் பேசி, ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் அதனை நிறைவேற்றி தருவோம்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….