காங்கிரஸ், பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் இன்று (ஏப்ரல் 4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 10 நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையங்கள் என பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கல்வீச்சு தாக்குதல், அடிதடி என கடும் மோதல் ஏற்பட்டது.
இருகட்சியினரும் சரமாரியாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த தாக்குதலில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உட்பட படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பும் புகாரளித்த நிலையில் பாஜகவை சேர்ந்த 2 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் மஹாராஜன் உட்பட வழக்குப்பதிவு செய்யப்பட்ட 13 பேரையும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அதில், “நாகர்கோவிலில் அமைதியாக போராடிய காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலானது, ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் விரைவான நடவடிக்கையைக் கோருகிறோம்.” என்றும் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம்?: உதயநிதி ஸ்டாலின் பதில்
பாரதி ராஜாவின் மார்கழி திங்கள்: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!