கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
நான்கு வருடமாகியும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல், இதோ அதோ என இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. முதலில் கடுமையான எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், பின்னர் கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு என இதுவரை உச்சநீதி மன்ற உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும், அவர்களை தடுக்க கூடாது எனவும், அம்மாநில அரசு காவல் துறைக்கு அறிவுறுத்தி வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது.
சபரிமலை சீசன் தற்போது தான் ஆரம்பித்திருப்பதால், இனி வரும் நாட்களில் பெண்கள் கணிசமான அளவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து மாநில அரசு திடீரென்று பின்வாங்கியுள்ளது. “சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் எனவும் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வழிகாட்டு நெறிமுறை தவறுதலாக அச்சிடப்பட்டதாகவும் கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த வருடமும் சபரிமலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபரிமலையை சர்ச்சைகள் சுற்றுவது ஒன்றும் புதிதல்ல.
1972 -ம் ஆண்டு, முதன் முதலில் சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என தேவஸ்தான போர்டு தடை விதிக்கின்றது.
சுமார் 20 வருடங்கள் அந்த நடைமுறை பின்பற்றிவரப்பட, 1991-ம் ஆண்டு எஸ்.மஹாதேவன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்று ஒரு வழக்கை தொடுக்கிறார்
.
அந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம்
, ஆகம விதியின்படியும், சபரிமலை தேவஸ்தான விதியின்படியும் பெண்களை அனுமதிப்பது தவறானது’ என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்கின்றது.
இதன் பின் 1995, டிசம்பர் மாதம் பம்பா நதியில் கழிவுகள் கலப்பதாகவும், சபரிமலையில் புனிதம் கெடுவதாக புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில், அப்போது பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக இருந்த நாற்பது வயதான கே.பி.வல்சலகுமாரியிடம் சபரிமலையை மேம்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
செயல்படுத்தப்படும் பணிகளை மேற்பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியரை சபரிமலையில் கால் வைக்க விடமாட்டோம் என பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், மாவட்ட ஆட்சியரின் வயது 40
இதன்பின் 2006-ம் ஆண்டு மீண்டும் சபரிமலை தகிக்க ஆரம்பித்தது. காரணம், பிரபல கன்னட நடிகை ஜெயமாலாவின் ஒரு பேட்டி.
அந்த பேட்டியில் ஜெயமாலா 1987 ஆண்டு ஒரு படப்பிடிப்புக்காகச் சபரிமலை கோயிலுக்குள் சென்றதாகவும், அப்போது தனக்கு 28 வயதே ஆகியிருந்ததாகவும் கூற, பக்தர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்போராட்டத்தின் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடியும் செய்யப்பட்டது.

இதன் பிறகு 2006 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம், `சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2008, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கானது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பின் 7 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் வழக்கு நிலுவையிலேயே இருந்தது. அதன்பின் 2016, ஜனவரி 11-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டன.
இதனையடுத்து இந்த வழக்குகள் அனைத்தும் 2017 அக்டோபர் 13-ம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் `பெண்களுக்குக் கோயிலில் நுழைய அடிப்படை உரிமை உள்ளது’ என கூறி வழக்கின் இறுதி விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
செப்டம்பர் 28, 2018 உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
கேரளாவில் பெரும் போராட்டமே வெடித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு(என்ஏடிஏ) சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மறு சீராய்வு மனுவினை விசாரித்தது.
பிப்ரவரி 10 – 2020 ஆம் ஆண்டு, இந்த மறு சீராய்வு மனுக்களின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டது.
வினோத் அருளப்பன்
ஷ்ரத்தா கொலை – சந்தேகம் வந்தது எப்படி?: தந்தை பேட்டி!
பிசாசு போல வளர்கிறது பிஜேபி: திமுகவினருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!