கடந்த 1992 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் ?என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.
ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. விமான நிலையத்துக்கு தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே என்றும், அவரது பையை எடுத்துச் செல்ல உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது என்பதே விமான நிலைய ஊழியர்களின் மனதை கவர முக்கிய காரணமாக அமைந்தது.
டிட்டோ’ மற்றும் ‘டேங்கோ’ என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் வளர்ப்பு பிராணிகளை ரத்தன் டாடா வளர்த்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு இது ஒரு உதாரணம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரை மொய்த்து கொள்ளும். இப்போதும், பம்பாய் ஹவுசில் தெரு நாய்கள் சர்வசாதாரணமாக ஆங்காங்கே உலவுவதை காண முடியும். மனிதர்கள் மட்டும்தான் அனுமதி வாங்கி விட்டு உள்ளே நுழைய வேண்டும்.
மற்ற இந்திய தொழிலதிபர்களுடன் ஒப்பிடும்போது ரத்தனின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்தது. ஆனால் தொழில் என்று வந்து விட்டால் ரத்தன் டாடா மிகுந்த வைராக்கியம் கொண்டவர். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.
டாடா மோட்டார்ஸ் 1998ஆம் ஆண்டில் சந்தையில் ‘இண்டிகா’ காரை அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் இந்த கார் பெரிய அளவு விற்பனை ஆகவில்லை. இதனால், 1999 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸை போர்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்து பில்போர்டை சந்திக்க ரத்தன் சென்றார்.
அங்கு , பில்போர்டு போதிய அறிவு இல்லாமல் ஏன் இந்த துறையை தேர்வு செய்தீர்கள்? என்று கேலி பேசியுள்ளார். இதனால், கோபமடைந்த டாடா பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு கிளம்பி விட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு, அந்த சம்பவம் நடந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு , ஃபோர்டு நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, பிரிட்டனில் தயாராகும் இரு சொகுசு கார் பிராண்டுகளான ‘ஜாகுவார்’ மற்றும் ‘லேண்ட் ரோவர்’ ஆகியவற்றை விற்க முடிவு செய்தது. அப்போது, டாடா நிறுவனம் அந்த இரு பிராண்டுகளையும் வாங்கியது. கேலி பேசியவருக்கும் உதவி செய்தவர்தான் ரத்தன் டாடா !
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு!