ஆரிஃப் உடன் சேர போராடும் சரஸ்… வழக்குப்போட்டு பிரித்த போலீஸ்: நடந்தது என்ன?

Published On:

| By christopher

ஷங்கர் இயக்கிய ’சிவாஜி’ படத்தின் முதல் காட்சியில் சிறைக் கூண்டுக்குள் இருக்கும் ரஜினியிடம், பக்கத்து செல்லில் இருக்கும் முதியவர் ’என்னப்பா என்ன தப்பு பண்ண?’ என்று விசாரிப்பார்… அதற்கு ரஜினி ‘நாட்டுக்கு நல்லது பண்ணேன்’ என்று கூற, அந்த முதியவர், ’அப்போ உள்ள தள்ள வேண்டியது தான்’ என்பார்.

இந்த வசனத்தை 100% உண்மை என நிரூபித்துள்ளது உத்தர பிரதேச மாநிலம் அமேதியைச் சோ்ந்த விவசாயி முகமது ஆரிஃபின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

சிவாஜி படத்தில் ரஜினி

பலநேரங்களில் பிறர் மூலமாகவும், சொந்த அனுபவம் மூலமாகவும் ‘நல்லது செய்ய நினைச்சதுக்கு இந்த தண்டனையா’ என்று ஏதாவது ஒரு கட்டத்தில் புலம்பியிருப்போம். அப்படி மனிதாபிமான உள்ளத்துடன் நல்லது செய்யப் போய், 35 வயதான முகமது ஆரிஃப் மீது முக்கியமான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதனால் கைவிலங்கு மாட்டாத விசாரணை கைதியாக போலீஸ், நீதிமன்றத்தால் மனிதாபமானமின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார் முகமது ஆரிஃப்.

ஆச்சரியம் தந்த விவசாயி-கொக்கு நட்புறவு

அமேதியில் மந்த்கா கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் வழக்கம்போல வேலைப்பார்த்து கொண்டிருந்தாா் விவசாயி முகமது ஆரிஃப். அப்போது காலில் காயத்துடன் பறக்க முடியாமல் விழுந்து கிடந்த சரஸ் கொக்கு ஆரிஃபின் கண்ணில் பட்டது.

அந்தப் பறவையைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற ஆரிஃப், காயம்பட்ட அதன் காலில் சில நாட்களுக்கு எண்ணெயில் மஞ்சள் கலந்து மருந்திட்டார். சரஸ் குணமடையும் வரை அதற்கு நாள்தோறும் உணவளித்து வந்தார்.

முழுமையாக சரஸ் குணமானதும் அது சுதந்திரமாக பறக்க வெளியே விட்டபோது, அங்கிருந்து அது செல்லவில்லை. மாறாக காயம்பட்ட தனக்கு கனிவு காட்டிய ஆரிஃப்புடன் இருக்கவே அது விரும்பியது. கடந்த ஒரு வருடமாக அவர் எங்கே சென்றாலும், தோளில் ஏறி கூடவே செல்லும் என்கிற அளவுக்கு நெருக்கமானது. அதன்படி ஆரிஃப் பைக்கில் செல்லும்போது அவருடன் சேர்ந்து சரஸ் பயணிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

வித்தியாசமான இந்த மனித – பறவை பாசப்பிணைப்பு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் ஆச்சரியமாக தோன்றியது. விரைவில் இருவரும் சமூக ஊடகங்களிலும் பிரபலமடைந்தனர். எந்த அளவிற்கு என்றால் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடந்த மார்ச் 5ஆம் தேதி அமேதி சென்று சரஸ் மற்றும் ஆரிஃப்பை நேரில் சந்தித்தார்.

சரஸுக்கு சரணாலயம்: ஆரிஃப்புக்கு வழக்கு

இந்த சந்திப்பு தேசிய அளவிலான ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவின் இந்த செயல் பொதுமக்களால் பாராட்டப்படுவதை ஆளும் பாஜக அரசு பொறுத்துக்கொள்ளுமா?

The bond between Arif and Sarus crane

கடந்த ஒருவருடமாக ஆரிஃப்பை கண்டுக்கொள்ளாத உத்தரபிரதேச பாஜக அரசு, அகிலேஷ் யாதவ் சந்தித்த அடுத்த சில வாரத்திற்குள் ஆரிஃப் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. ஏனென்றால், அழிவின் விளிம்பில் இருக்கும் பறவை இனங்களின் பட்டியலில் சரஸ் கொக்கு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உத்தர பிரதேச மாநிலத்தின் மாநிலப் பறவையாகவும் சரஸ் கொக்கு உள்ளது.

இதனையடுத்து அமேதிக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் சரஸ் கொக்கை ஆரிஃபிடமிருந்து கைப்பற்றினர். அதனை ரேபரேலியில் உள்ள சமஸ்பூா் பறவைகள் சரணாலயத்தில் கொண்டுபோய் விட்டனா்.

ஆனால் தன்னை காப்பாற்றி உணவூட்டிய ஆரிஃப்பை பிரிந்து ஏனைய பறவைகளுடன் தங்கத் தயாராக இல்லை சரஸ். அங்கு நாய்களால் துரத்தப்பட்டு, பயந்து நடுங்கிய நிலையில் கான்பூா் உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர் அதிகாரிகள்.

இதற்கிடையே வழக்கால் அலைக்கழிக்கப்பட்ட விவசாயி முகமது ஆரிஃப், தனது சரஸைப் பார்க்க கடந்த மாதம் கான்பூா் உயிரியல் பூங்காவிற்கு சென்றாா். அவரைப் பாா்த்ததுதான் தாமதம், கூண்டிற்குள் துள்ளிக்குதிக்கத் தொடங்கிவிட்டது அந்தப் பறவை.

https://twitter.com/varungandhi80/status/1646007344101457925?s=20

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி, பலரும் கண்கலங்கிய நிலையில் அதனை ஆரிஃப்புடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறு குறிப்பிட்டனர்.

பாஜக எம்.பி.யான வருண் காந்தி, இந்த வீடியோவை பகிர்ந்து, ”ஆரிஃப்பை கண்டதும் துள்ளிகுதிக்கும் சரஸின் மகிழ்ச்சி, இருவருக்கிடையேயான அன்பு எவ்வளவு தூய்மையானது என்பதை காட்டுகிறது. இந்த அழகான உயிரினம் கூண்டுக்குள் அல்ல சுதந்திர வானத்தில் பறக்கவே படைக்கப்பட்டது. அதன் வானத்தையும், அதன் நண்பனையும் அவனுக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால் ஆளும் அரசாங்கமும் சரி, அதிகாரிகளும் சரி அதனை சட்டை செய்யக்கூட தயாராக இல்லை. கூண்டுக்குள் இருந்த தன்னை ஆரிஃப் விடுவிப்பார் என்று ஆர்ப்பரித்த கொக்கு, கையறு நிலையில் ஆரிஃப் சென்ற அந்த நாளில் இருந்து சரியாக உணவுக்கூட சாப்பிடுவது இல்லையாம்.

The bond between Arif and Sarus crane

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்

சரி ஆரிஃப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இதுகுறித்து என்ன கூறுகிறது?

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் 39வது பிரிவின் கீழ், எந்தவொரு நபரும் அரசு சொத்தாக இருக்கும் எந்த வனவிலங்குகளையும் கையகப்படுத்தவோ அல்லது தனது வசம் வைத்திருக்கவோ, காவலில் வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை.

எவரேனும் அவ்வாறு செய்தால் – அதாவது காயம்பட்ட பறவைக்கு விவசாயி ஆரிஃப்பை போல சிகிச்சை அளிக்க நினைத்தால், அதனை கண்ட 48 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடமோ புகாரளிக்க வேண்டும்.

மேலும், சட்டத்தின் 57-வது பிரிவின் கீழ், ஒரு நபர் ஏதேனும் வனவிலங்குகளை தன் வசம், காவலில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அது சட்டவிரோதமானது அல்ல என்பதை நிரூபிக்க அனுமதி அளிக்கிறது.

மேலும் மாநிலத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி காயமடைந்த காட்டுப் பறவையை அதிலும் குறிப்பாக அழிவின் விளம்பில் இருக்கும் பறவை இனத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும், மாதக்கணக்கில் வைத்திருக்கவும் யாருக்கும் அனுமதியில்லை.

The bond between Arif and Sarus crane

இம்பிரிண்டிங்: பறவையியல் நிபுணர்கள்

இதுகுறித்து பறவையியல் நிபுணர்கள் கூறுகையில், “இளம் பறவைகள் எளிதில் வளர்க்கப்படுவதற்கு தன்னை தகவமைத்துகொள்ளும். மேலும் அவைகளுக்கு உணவளிக்கும் அல்லது நேசிக்கும் நபருடன் நட்பு பாராட்டி, அவா்களையே தங்களது பெற்றோா் அல்லது பாதுகாவலா்களாகக் கருதி ஒரு நாயைப் போல பின்தொடரும். இதனை ஆங்கிலத்தில் இம்ப்ரிண்டிங் என்று அழைப்பதாக கூறுகின்றனர்.

மேலும், மனிதா்களுக்கும் பறவைகள், விலங்கினங்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவது புதிதல்ல. பல நேரங்களில் நாய்-வாத்து, பூனை-கோழி என இரு வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மிருகங்களுக்கு இடையேகூட அதிசயத்தக்க விதத்தில் நட்பு ஏற்படுவதுண்டு.” என்று தெரிவிக்கின்றனர்.

The bond between Arif and Sarus crane

மீண்டும் இணைவார்களா சரஸ்-ஆரிஃப்

இந்த நிலையில் தான் பறவை சரஸ் கொக்கு மற்றும் விவசாயி முகமது ஆரிஃப் வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சரஸ் கொக்குகள் மனிதர்களுடன் அதிசயிக்கத்தக்க உறவை கொண்டிருந்தன. 1989 ஆம் ஆண்டில், பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய், கஜுராஹோவில் ஒரு குடும்பத்துடன் ’குர்ர்குட்’ என்று பெயரிடப்பட்ட ஒரு சரஸ் கொக்கு சப்பாத்திகள் உண்பதை ஆவணப்படுத்தினார். அப்போது அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை.

எனவே, சரஸ் – ஆரிஃப் வழக்கில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தினை கண்மூடித்தனமாக பின்பற்றுவது தீங்கையே விளைவிக்கும். உலகெங்கிலும் உள்ள பல உயிரியல் பூங்காக்களில், சரஸ் கொக்குகள் தங்களது பராமரிப்பாளர்களுடன் எப்போதும் பாசம் கொண்டிருக்கும். அவற்றை காடுகளுக்கு அனுப்புவது ‘பொருத்தமாக’ இருக்காது. மேலும் அவை மற்றொரு கொக்குடன் இணைவதற்கான வாய்ப்புகள் பொருத்தமாக இருக்காது என்று வாட்டர்பேர்ட்ஸ் சொசைட்டியின் தலைவர் கோபி சுந்தர் கூறுகிறார்.

இதனை ஆரிஃபிடமிருந்து சரஸ் கொக்குகளை பிரித்த வனத்துறை அதிகாரிகள் உணரவே இல்லை. விவசாயி ஆரிஃபிடம் இருந்து பெற்ற அன்பையும், பாதுகாப்பையும் கான்பூா் உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டு சரஸ் கொக்குக்கு என்றும் தந்துவிடாது. எனவே, இருவரையும் மீண்டும் இணைத்து, அவர்களை விடுவித்து, அப்படியே இருக்க விடுவதுதான் இப்போது எடுக்கப்பட வேண்டிய புத்திசாலித்தனமான அத்தியாவசிய வழி!

கிறிஸ்டோபர் ஜெமா

பழனிவேல் தியாகராஜன் வாழ்க: எடப்பாடி பழனிசாமி

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… உள்ளே, வெளியே யார் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel