இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.
சமையலுக்கான உப்பு தொடங்கி எஃகு, ஆட்டோமொபைல், கார்கள் உற்பத்தி, டாப் எம்.என்.சியான டிசிஎஸ் வரை டாடா குரூப் கால் பதிக்காத துறைகள் இல்லை.
இந்திய தொழில்துறையின் ஒரு மாபெரும் சக்தியாக உள்ளது டாடா குழுமம்.
இதன் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தார். டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் ஆவார்.
டாடா குழுமம் சவாலை சந்தித்த காலகட்டமான 1991 ஆம் ஆண்டு, அதன் தலைவராக பொறுப்பேற்றார் ரத்தன் டாடா. அப்போது 5.8 பில்லியன் டாலராக இருந்த டாடா குழுமத்தின் வருவாய் 2011ல் கிட்டத்தட்ட 85 பில்லியன் டாலராக உயர்ந்தது.
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்த ரத்தன் டாடா நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரிஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், எனது உடல்நிலை பற்றிய செய்திகள் பரவுவதை அறிவேன். நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்த சூழலில் அக்டோபர் 9ஆம் தேதி இரவு ரத்தன் டாடா மறைவெய்தியதாக டாடா குழுமம் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளது.
டாடா குழும சேர்மன் சந்திரசேகரன்,”டாடா குழுமத்தை மட்டுமல்ல, நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைக்க முக்கிய பங்காற்றிய ரத்தன் டாடா நம்மை விட்டு விடை பெற்றார். எனக்கு அவர் வழிகாட்டி மட்டுமல்ல ஒரு சிறந்த நண்பர். அவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தியது” என்று கூறியுள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “வணிகத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் ரத்தன் டாடா. இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார். தனது பணிவு, இரக்க குணம், சமூக சிந்தனையால் அவர் பலராலும் நேசிக்கப்பட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: உண்மையை உடைத்த உதயநிதி… உஷ்ணத்தில் ‘சாம்சங்’ கூட்டணி!
குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு… எவ்வளவு தெரியுமா?