கேரளாவில் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பேருந்திலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருநாவயா பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பெண் செரிணா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று (மே 29) அங்கமல்லியில் இருந்து தொட்டில்பாலம் பகுதியை நோக்கி சென்ற கேரள அரசு பேருந்தில் மதியம் ஒரு மணிக்கும் பயணம் செய்துள்ளார். பேருந்து திருச்சூர் அருகே பேரமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
“அய்யோ… அம்மா… என்னால் வலி தாங்க முடியவில்லை” என கத்தவே சற்றும் தாமதிக்காமல், பேருந்தில் பயணித்த பயணிகளின் ஒப்புதலுடன் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு உடனடியாக ஓட்டுநரும் நடத்துநரும் மருத்துவமனையை நோக்கி பேருந்தை விட்டனர்.
அருகில் உள்ள அமலா மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சென்றுகொண்டிருந்தனர்.
#WATCH: In an unexpected turn of events, a woman gave birth inside a KSRTC bus that was traveling through Peramangalam,
Thrissur. A 37-year-old woman from Malappuram gave birth while she and her husband were traveling from Thrissur to Thottilpalam in Kozhikode.#Kerala #Pregnat… pic.twitter.com/6ByhLME877— Mirror Now (@MirrorNow) May 30, 2024
இந்த தகவலின் பேரில் மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இந்தநிலையில், மருத்துவமனைக்கு செல்வதற்குள் பேருந்திலேயே பனிக்குடம் உடைந்து குழந்தை பிறக்கும் நிலையில் இருந்ததை கண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பேருந்தில் இருந்தே பிரசவம் பார்த்தனர். பிரசவத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் பேருந்திற்குள்ளேயே கொண்டுவந்து கொடுக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர், அந்த பெண்ணும், குழந்தையும் மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்தில் வைத்தே பிரசவம் பார்க்கும் பரபரப்பான காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கும், பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…