வந்தே பாரத் ரயில்… இந்தியாவின் அதிவேகமான ரயில். மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் முக்கிய மைல்கல்லாக வந்தே பாரத் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வந்தே பாரத் ரயில் வீடியோவை பகிர்ந்திருந்தார். நீர்நிலை பகுதியில் செல்லும் அந்த ரயிலின் வெளிபுற தோற்றம் அப்படியே தண்ணீரில் பிரதிபலிக்கும்படி பதிவாகியுள்ள வீடியோ பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் இருக்கிறது.
சதாப்தி போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டாலும், அதிநவீன வசதிகளுடன் பயணிகள் சொகுசாக பயணிக்க ஏதுவாக உள்ளது வந்தே பாரத். வந்தே பாரத்தில் பயணிக்கவும், குறிப்பாக அதில் பயணிக்கும் போது செல்பி எடுப்பதும், ரீல்ஸ் செய்வதும் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
அப்படி, கடந்த ஜனவரி மாதம் ஒரு நபர் ‘செல்பி’ ஆசையில் ஆந்திர மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் ஏறினார். செல்பி எடுத்து இறங்குவதற்குள் ரயிலின் தானியங்கி கதவு முடியாதால் இறங்க முடியாமல் டிடிஆரிடம் சிக்கி 6000 ரூபாய் அபராதம் கட்டினார்.
இப்படி மக்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கும் வந்தே பாரத் 8 வழித் தடங்களில் இயக்கப்படுகிறது.
டெல்லி – வாரணாசி, டெல்லி – காத்ரா, காந்திநகர் – மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா – டெல்லி, மைசூரு – சென்னை, விசாகப்பட்டினம் – செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
அடுத்ததாக சென்னை டூ கோவைக்கு புதிதாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
வைஃபை, ஏசி, சாய்வு இருக்கை என சொகுசாக இருந்தாலும், பயணிகளால் ரயில் அசுத்தப்படுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய வாசிகளால் ட்விட்டரில் பதிடப்பட்டு வருகின்றன.
முதலில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அதில், பயணிகள் உணவு பொருட்களின் கவர்களையும், காலி தண்ணீர் பாட்டிலையும் தூக்கி வீசிவிட்டு சென்றிருந்தது இடம் பெற்றிருந்தது. அந்த பதிவில் ”நாமெல்லாம் மக்கள் தானே” என்று கேப்ஷனும் போட்டிருந்தார் அவானிஷ் சரண். இந்த ட்விட்டர் பதிவு வைரலானது.
இதோடு வந்தே பாரத் ரயில் தூய்மை இல்லாமல் இருப்பதாக ரயில்வேக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன.
இதனால் ரயில்களை சுத்தமாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரயிலில் சுத்தம் செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளது. வந்தே பாரத்தில் எப்போதும் ஒருவர், ஒரு பையுடன் குப்பை வாங்குவதற்கு நகர்ந்துகொண்டே இருப்பார் என தெரிவித்திருந்தார்.
இதோடு வந்தே பாரத்தில் தூய்மை தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.
கடந்த மார்ச் 5ஆம் தேதி கத்ரா முதல் டெல்லி வரை சென்ற வந்தே பாரத் ரயிலில் பெண் ஒருவர் புட் ட்ரேயில் அமர்ந்துகொண்டு, இருக்கையில் கால் வைத்து பயணிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

இந்நிகழ்வை குறிப்பிட்டு வடக்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வே சொத்துகளை பரமாரிக்கும் பொறுப்பு என்பது ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்ல. அது ஒரு கூட்டு பொறுப்பு. பயணிகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இரு தரப்பு பங்களிப்பும் இருந்தால் தான் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும். தயவு செய்து பயணிகள் பொறுப்பாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தது.
மற்றொரு நிகழ்வாக ஒரு பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் வந்தே பாரத் ரயிலின் புட் ட்ரே தூய்மையின்மையாக இருந்ததாக புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

புதிய ஜல்பைகுரி சந்திப்பு முதல் ஹவுரா வரை பயணித்த அந்த பயணி, ரயில் எடுப்பதற்கு முன் சுத்தம் செய்யப்படாமல் இருந்த அந்த புட் ட்ரே ஹவுராவில் இறங்கும் வரை அப்படியேதான் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு நாங்கள் ப்ரீமியம் கட்டணத்தை செலுத்தி வேற பயணிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரயிலில் இதுபோன்ற புகார்கள் ட்விட்டுகள் அதிகரித்த வண்ணம் இருக்க ராஜ்தானி ரயிலிலும் இதே நிலை இருப்பதாகவும், அவற்றை சுத்தம் செய்ய ரயில்வே பராமரிப்பு குழு மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரயில் பயணி ஒருவர்.
மற்றொரு பக்கம் தேஜஸ் ரயிலிலும் கழிவறை சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதில் ஏசி இருக்கை எக்சிகிடியூவ் இருக்கை என பயணிகள் வசதிக்கு ஏற்ப ரூ.1,060, ரூ.2,135 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
“இதில் பயோ டாய்லெட் எனப்படும் உயிரி கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கழிவறை சரியில்லாமல், அடைப்பு ஏற்பட்டது போல் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதிவர்கள் எல்லாம் கழிவறைக்கு செல்ல முடியாமல் தவிப்பதாகவும், இதற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தேஜஸ் ரயிலில் பயணிக்கும் சில பயணிகள் கூறுகின்றனர்.
வந்தே பாரத்தாக இருந்தாலும் சரி, ராஜ்தானியாக இருந்தாலும் சரி, தேஜஸ் ரயிலாக இருந்தாலும் சரி இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு? என்ற முக்கிய கேள்வி எழுகிறது.
எனவே பயணிகளும் சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று பல லட்சகணக்கானோர் பயணிக்கும் இந்திய ரயில்களில் கழிவறை, ஏசி, மின்விசிறி, இருக்கை வசதி என எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து பயணிகளுக்கு சௌகரியமான, பாதுகாப்பான பயணத்தை ரயில்வேயும் உறுதி செய்ய வேண்டும்.
பிரியா