இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று(மார்ச் 22 ) உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கொரோனா அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கொரோனா சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
கொரோனா தடுப்பு மருந்துகள் இன்ஃப்ளூயன்சா தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின் கையிருப்பு மற்றும் அவற்றின் விலை விவரம் குறித்து கண்காணிப்பது பற்றியும் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022-ம்ஆண்டு டிசம்பர் 27-ம்தேதி 22ஆயிரம் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஒத்திகை குறித்தும் மருத்துவமனைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆய்வக கண்காணிப்பு அவசியம் என்றும் மரபணு பரிசோதனை மற்றும் கடுமையான சுவாச பாதிப்புகளுக்கு ஆளான அனைவருக்கும் பரிசோதனை செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று மருத்துவமனைகளில் மாதிரி சிகிச்சை முறைகளை நடத்திடும்படியும், கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
ஒவ்வொருவரும் சுவாச சுகாதார பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள், சுகாதார நிபுணர்கள், சுகாதார ஊழியர்கள்,
ஆகியோர் முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்