புனேவில் நடந்த சொகுசு கார் விபத்தில் கைது செய்யப்பட்டு சிறுவர் முகாமில் உள்ள சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வாலும் இன்று (ஜூன் 1) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே சொகுசு கார் விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால் (வயது 17). இவர் மே 19ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு காரில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் மோதினார்.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, மே 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் புனே சிறப்பு நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். சிறுவனை விசாரித்த நீதிமன்றம், சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் சிறுவர் முகாமில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவனின் தந்தை தொழிலதிபர் விஷால் அகர்வாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுவனுக்கு மது வழங்கியதாக உணவக உரிமையாளர், மேலாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, சிறுவனின் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரியும் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்குமாறு வற்புறுத்தியதாக, சிறுவன் வேதாந்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டார்.
சிறுவனின் தாய் கைது
இந்நிலையில், சிறுவனை காப்பாற்ற அவரது ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிக் கொடுக்க முயன்ற அவரது தாயார் இன்று (ஜூன் 1) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, விபத்து ஏற்படுத்தியது தொடர்பான விசாரணையில், சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய புனேவில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்கு சிறுவனின் ரத்த மாதிரி அனுப்பப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவில் அந்த சிறுவன் மது அருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுத்தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவனை காப்பாற்ற தாயார் ஷிவானி அகர்வால் சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக தனது ரத்த மாதிரியை கொடுத்தது தெரியவந்தது.
மேலும், தடயவியல் மருத்துவர்களான அஜய் தவாடே மற்றும் ஹரி ஹர்னூர் ஆகியோரிடம் அறிக்கையை மாற்றி கொடுக்கும் படியும் அகர்வால் குடும்பத்தினர் கூறியது தெரியவந்தது. இதனால், ஆய்வறிக்கையை மாற்றி கொடுத்த 2 மருத்துவர்களையும் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று (ஜூன் 1) சிறுவனின் தாய் ஷிவானி அகர்வாலை புனே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…