ஆன்லைன் கடன் செயலி வழக்கு: ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Monisha

ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்கள் பலர் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவது அதிகரித்துள்ளது.

எனினும் இது ஆபத்தான விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலையும் செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இது தொடர்பாகப் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “பிரதமர் கூறியது போல் தற்போது நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ரிசர்வ் வங்கி தற்போது வங்கிகள் அல்லாத நிறுவனங்களும் பொதுமக்களுக்குக் கடன் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் முன்பு கடன் பெற வேண்டும் என்றால் வங்கிக்குச் சென்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கிக்கு நேரடியாகச் சென்று பலமுறை அலைந்து கடன் பெற வேண்டும்.

தற்கொலைக்கு தூண்டுகின்றன!

ஆனால் தற்போது நமது ஸ்மார்ட் போன் மூலமாக விரைவாகக் கடன் பெற முடிகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் செயலி உருவாக்கி அதன் மூலம் கடன் வழங்கி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதை நம்பி பலர் தங்களது பணம், சொத்து ஆகியவற்றை இழக்கின்றனர்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களைக் குறி வைத்து இது போன்ற கடன் செயலி மோசடி நடைபெறுகிறது.

0% வட்டி என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வங்கிகள் போன்றே தனது இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

வட்டி கட்ட முடியாமல் திணறுபவர்களிடம் பணம் பெறுவதற்காக, பதிவிறக்கம் செய்துள்ள கடன் செயலிகள் மூலம் அவர்களின் புகைப்படங்களை மொபைலிருந்து திருடி அதனை ஆபாசமாக மார்ப்பிங் செய்கின்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்டவரின் தொடர்பு எண்களுக்கு அதனை அனுப்புகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதனைத் தடுக்க கடன் செயலிகளுக்குப் பதிவு எண் வழங்கவும், விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, கடன் செயலிகளை அனுமதிக்கும் போது அதற்கு சில விதிமுறைகளை உருவாக்கவும், பதிவு எண்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் உத்தரவு!

இந்த மனு இன்று (நவம்பர் 7) உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், மத்திய நிதி மற்றும் செலவீனத்துறை செயலர் மற்றும் ரிசர்வ் வங்கி செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.” என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையையும் நீதிபதிகள் 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

மோனிஷா

“நூற்றாண்டு கால போராட்டத்தில் பின்னடைவு”- 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து ஸ்டாலின்

10% இட ஒதுக்கீடு : ”அடிப்படை தரவு இன்றி வழங்கப்பட்ட தீர்ப்பு!” – பாமக வழக்கறிஞர் பாலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel