கர்நாடக மாநிலம் பாலக்காட் மாவட்டத்தில் மருமகன் மீது மிளகாய் பொடி தூவி பின்பு சரமாரியாக வெட்டி ஆணவக்கொலை செய்த மாமனாரை போலீஸ் கைது செய்தது.
கர்நாடக மாநிலம் பாலக்காட் மாவட்டம் ஜம்கண்டி தாலுக்காவில் உள்ள டக்கோடா கிராமத்தை சேர்ந்தவர் தம்மன்ன கவுடா பாட்டில். இவர் சத்ரிய இனத்தை சேர்ந்தவர்.
இவரது மகள் பாக்யஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி ஜெயின் சமூகத்தை சேர்ந்த புஜபலி கர்ஜிகி (34) என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தை பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளாத நிலையில் காவல் நிலையத்தில் ஆண் வீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் நடைபெற்று,
பின்பு அதே கிராமத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

மகள் தன் பேச்சை மீறி வேறு சாதி ஆணை திருமணம் செய்து கொண்டதை சிறிதும் ஏற்றுக் கொள்ளாத தம்மன்ன கவுடா தனது மருமகனை கொலை செய்ய முடிவு செய்து பல வாரங்களாக தக்க நேரத்திற்கு காத்துக் கொண்டிருந்தார் .
புஜபலி, கடந்த சனிக்கிழமை கிராமத்தில் நடந்த அனுமன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பின்பு நள்ளிரவில் வீட்டிற்கு செல்ல கோயில் பின்புறம் இருந்த தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுக்க சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் புஜபலி வருகைக்காக தம்மன்ன கவுடா மற்றும் அவரது இரு கூட்டாளிகள் காத்து கொண்டிருந்தனர்.
புஜபலி வாகனத்தை எடுக்க முயற்சித்த போது அங்கு புதரில் மறைந்து நின்று கொண்டிருந்த தம்மன்ன கவுடா மற்றும் அவரது கூட்டாளிகள் புஜபலி கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தினர்.

இதில் நிலை தடுமாறி புஜபலி கீழே விழுந்த போது சுற்றி இருந்த மூன்று பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
சம்பவ இடத்திலேயே புஜபலி பலியான நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு அதே கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தம்மன்ன கவுடா குடும்பத்தாரிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரது இரு கூட்டாளிகள் தற்பொழுது வரை தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலை.ரா