இந்திய விமானங்களுக்குக் கடந்த ஒருவாரமாகத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக இயக்குநர் விக்ரம் தேவ் தத், நிலக்கரி அமைச்சகத்துக்கு நேற்று (அக்டோபர் 19) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் இந்திய விமானங்களுக்கு சுமார் 40க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால் சோதனைக்கு பிறகு பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. அதே போல் சில விமானங்கள் சோதனை செய்வதற்காக திசை திருப்பிவிடப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட ரூ.60 முதல் ரூ.80 கோடி வரை இந்தியா விமானங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளன என்று விமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மும்பையிலிருந்து ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு புறப்படத் தயாராக இருந்த இரண்டு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதனால் அந்த இரண்டு இண்டிகோ விமானங்களும் சோதனை செய்யப்பட்டன. அதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
அதே தினத்தன்று மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்குப் புறப்பட்டு சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதனால் அவ்விமானம் சோதனை செய்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதுவும் புரளி என உறுதி செய்யப்பட்ட பிறகு தாமதமாக நியூயார்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றது.
அதே போன்று கடந்த 16ஆம் தேதி டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சிகாகோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், கனடா நாட்டின் ஈகலூயித் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் சோதனை நடைபெற்ற நிலையில், கனடா விமானப் படையின் விமானம் மூலம் ஏர் இந்தியா பயணிகள் சிகாகோவிற்கு சென்றனர்.
இதுபோல் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்கள், கடிதங்கள் மூலம் எனக் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அனைத்தும் புரளி என விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மர்ம நபர்களால் விடப்பட்டன. அதில் 6 விஸ்தாரா விமானங்களும், ஏழு இண்டிகோ விமானங்களும் அடக்கம். எனினும் அவைகளும் புரளியே.
இதற்கிடையே, “இது போல் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை விதிப்பது பற்றி அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன” என்று விமான துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கடந்த 17ஆம் தேதி தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டியின் (BCAS) அதிகாரிகள், பல்வேறு விமான நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
“இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விமானங்களின் பாதுகாப்பு குறித்தும், பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச சிரமத்தை உறுதி செய்வது ஆகியவற்றை குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்று உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இயக்குநர் விக்ரம் தேவ் தத் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளராக நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்
IND vs NZ Test : கலக்கத்தில் இந்திய அணி… காப்பாற்றுமா மழை?
”அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடு” : சுப்ரியா சாஹு அதிருப்தி!