பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரிக்கும் 5 மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இதற்கு காரணம் மாஃபியாக்களின் சதிச் செயல் என்று பதஞ்சலி நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
பதஞ்சலி குழுமத்தில் தற்போது பதஞ்சலி ஆயுர்வேதம், பதஞ்சலி ஃபுட்ஸ், , பதஞ்சலி மெடிசின், பதஞ்சலி லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் நிறுவனர் பாபா ராம்தேவ் ஆவார்.
இந்நிறுவனத்தால் தயார் செய்யப்படும் பொருட்கள் மீது குற்றச்சாட்டு எழுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2017ல் பதஞ்சலி நிறுவனத்தின் 40 சதவிகித பொருட்கள் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படாமல் தரமற்றவையாக இருப்பதாக ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்தது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் பதஞ்சலியின் 5 மருந்துகளுக்கு நேற்று (நவம்பர் 10) தடை விதித்துள்ளது.
ஆணையத்தின் உரிமம் வழங்கும் அதிகாரி ஜங்பாங்கி, பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
“நீரிழிவு, கண் தொற்றுநோய், தைராய்டு, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிட், பிபிக்ரிட் மற்றும் லிப்பிடோம் ஆகியவற்றின் உற்பத்தியை நிறுத்துமாறு பதஞ்சலி உற்பத்தியாளரான திவ்யா மருந்தகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பொருட்களுக்கான விளம்பரங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோன்று திவ்யா பார்மஸி சார்பில் சமர்ப்பிக்கப்படும், இந்த மருந்துகளின் பார்முலேஷன் சீட்டை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அளிக்கும் முடிவின் படி மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவது பற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கண் மருத்துவர் கே.வி.பாபு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், பதஞ்சலி நிறுவனத்தின் கண் சொட்டு மருந்து கிளகோமா, கண்புரை மற்றும் பல கண் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.
சில நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் இதுபோன்ற மருந்துகளை விளம்பரப்படுத்தக் கூடாது.
இந்த விளம்பரங்கள் மருந்துகள் மற்றும் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரம்) சட்டத்தை மீறுகின்றன. ஒருவேளை இந்த கண் மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் பார்வையை இழக்கக்கூடும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி இந்த மருந்துகளுக்கான விளம்பரங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்த கடிதத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உதவியுடன், ஆயுர்வேத பாரம்பரியத்தில் மிக உயர்ந்த ஆராய்ச்சி மற்றும் தரத்துடன் அனைத்து சட்டப்பூர்வமான செயல்முறைகள் மற்றும் சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவ உலகில் குழப்பத்துடனும், பயத்துடனும் தொழில் செய்பவர்களால் நாங்கள் தாக்கப்படுகிறோம். ஆயுர்வேத எதிர்ப்பு மருந்து மாஃபியாக்களின் சதிச் செயல் இது என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஊடகங்களில் சொல்லப்படுவது போல் கடிதம் எதுவும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இதுபோன்ற சதியில் ஈடுபட்டவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரியா
Comments are closed.