ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் சட்டர்கலா மற்றும் கந்தோபலேஸா பகுதிகளில் நேற்று (ஜூன் 12) நடந்த தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உட்பட ஏழு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவிஏற்ற நாளன்று, ஜம்மு காஷ்மீரில் ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பேருந்து பள்ளத்தில் விழுந்து 9 பேர் பலியாகினர், 41 பேர் காயமடைந்தனர்.
அதைதொடர்ந்து செவ்வாய்கிழமை, 11ஆம் தேதி இரவு கதுவா மாவட்டத்தில் குடியிருப்பின் மீதும், தோடா பகுதியில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்தும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு தோடா மாவட்டத்தில் இருமுறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. சட்டர்கலா மற்றும் கந்தோ பலேஸா பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இப்படி 4 நாட்களில் அடுத்தடுத்து 4 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.
இந்தநிலையில் ஜம்மூ காஷ்மீர் போலீசார் 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, இவர்கள் குறித்து துப்பு தந்தால் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அதேசமயம், ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள், சிறப்புப் படை காவலர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் ராணுவ வீரர்களும் காஷ்மீர் மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
“காஷ்மீரில் ரெய்சி, தோடா, கதுவா ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதைபற்றி எல்லாம் மோடிக்கு கவலையில்லை. தீவிரவாத தாக்குதலால் கொடூரமாக கொல்லப்பட்ட பக்தர்களின் குடும்பத்தினரின் அழுகுரலை கூட கேட்க முடியாத அளவுக்கு, வாழ்த்து செய்திகளுக்கு பதிலளிப்பதில் மும்மரமாக இருக்கிறார் மோடி.
பாஜக ஆட்சியில் தீவிரவாதிகள் ஏன் பிடிபடவில்லை என்று நாட்டு மக்களுக்கு மோடி விளக்கமளிக்க வேண்டும்” என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
T20 உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி!
50 சதவீத கட்டண சலுகை… 50வது நாள் விழா கொண்டாடுமா ராமராஜனின் ‘சாமானியன்’!