கேரளாவில் முதல் முறையாக பழங்குடி இன பெண் ஒருவருக்கு விமான பணிப்பெண் வேலை கிடைத்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அலக்கோடு அருகே உள்ள கவுங்குடி எஸ்டி காலனியைச் சேர்ந்தவர்கள் கோவிந்த் மற்றும் விஜி தம்பதியினர்.
இவர்களது மகள் கோபிகா கோவிந்த்(24). பழங்குடி இனத்தைச் சேர்ந்த கரிம்பாலா சமூகத்தைச் சேர்ந்த கோபிகா, தனது 12 வயதில் இருந்தே விமானப் பணிப்பெண்ணாக ஆசைப்பட்டார்.
ஆனால் பெரும்பாலான பழங்குடியின பெண்களை போலவே அதற்கான வசதியும், வாய்ப்பும் அவருக்கு அமையவில்லை.
இருப்பினும் கோபிகா தனது லட்சியத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில் விமான பணிப்பெண்ணாக விரைவில் பணிபெற உள்ள கோபிகா, கேரளாவின் முதல் பழங்குடி இன பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அரசுத் திட்டத்தின் கீழ் படித்த எஸ்டி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது சமூகவலைதளங்களில் கோபிகா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பணிப்பெண் உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.
இதனையடுத்து அதனைக் கண்ட பலரும், பழங்குடி இன மக்களுக்கு பெருமை சேர்ந்த கோபிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
விமான பணிப்பெண் பயிற்சி பெற தனியார் மையங்களில் படித்தால் லட்சக்கணக்கில் செலவாகும். இந்நிலையில் பொருளாதாரத்திலும், வசதி வாய்ப்பிலும் பின் தங்கியிருக்கும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அது எட்டா கனி தான்.
இதனை கருத்தில் கொண்டு கேரளாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது.
ஆனாலும் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இதனை மாற்றியமைத்து பழங்குடியின பெண்கள் கல்வியில் முன்னேறவும்,
வேலை வாய்ப்புகள் பெறவும் கேரள அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அறிந்த கோபிகா, எஸ்டி பெண்களின் கல்விக்கான அரசின் நிதியுதவி திட்டத்துடன், வயண்ட்ஸ் ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் டிரெய்னிங் அகாடமியில் IATA வாடிக்கையாளர் சேவைப் பராமரிப்பில் டிப்ளோமா பெற்றுள்ளார்.
மேலும் இதற்கான கல்வி செலவாக சுமார் ரூ.1 லட்சம் வரை கேரள அரசின் கல்வி திட்டத்தின் கீழ் கோபிகா பெற்றுள்ளார்.
தற்போது தனது இறுதி பயிற்சிக்காக மும்பைக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து கோபிகா கூறுகையில், “சிறுவயதில் எனது வீட்டிற்கு மேலே விமானம் பறப்பதைப் பார்த்து, அதில் நான் பறக்க விரும்பியதை இன்னும் என் நினைவில் வைத்திருக்கிறேன்.
இப்போதும், நான் ஒரு விமானத்தின் அருகே செல்லும்போது உற்சாகமாக உணர்கிறேன். வானத்தைத் தொட வேண்டும், விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற இந்த கனவு சிறுவயதில் இருந்தே என்னிடம் இருந்தது.
ஆனால் நான் யாரிடமும் அதை சொல்லவில்லை. என் பெற்றோருக்கு கூட அது தெரியாது.
எனது படிப்புக் கட்டணமான ரூ.1 லட்சத்தை மாநில அரசு செலுத்தியது. இதற்காக மாநில அரசாங்கத்திற்கும், அகாடமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா