சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

Published On:

| By Kavi

govi lenin japan travel story 9

கோவி.லெனின்

டோக்கியோவின் குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குகளில் ஓடுகின்ற மெட்ரோ ரயில்களின் தரத்திற்கு ஈடாக நம் சென்னை மெட்ரோ ரயில்களும் இருப்பதை கவனிக்க முடிந்தது. கொஞ்சம் மாறுபாடாக, ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்குமான தடுப்பு, அடுத்த ரயில் நிறுத்தம் எது என்பதை வரைபடமாகக் காட்டும் சென்னை மெட்ரோவைவிட சற்று கூடுதலாக அது எத்தனை கிலோமீட்டர் தூரம், இன்னும் எத்தனை நிமிடங்களில் அங்கு செல்லும் என்ற விவரங்களும் உள்ளன. டோக்கியோவின் மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் எல்லாவற்றிலும் சென்னை ஈடு கொடுப்பதை உணர முடிந்தது.

“உலகளவில் மெட்ரோ ரயில்களுக்கென வரையறைகள் உண்டு. அதை எல்லா மெட்ரோவிலும் பார்க்கலாம்” என்றார் கமல். பாரீஸ், லண்டன் போன்ற வளர்ச்சிமிக்க நாடுகளின் தலைநகரங்களில் ஓடும் மெட்ரோ ரயில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக அறிமுகமானதும் அதனை சென்னைக்கு கெண்டு வர, அன்றைய முதல்வர் கலைஞர் எடுத்த முயற்சியும், சர்வதேசத் தரத்திலான அந்தத் திட்டத்தை அவர் வெற்றிகரமாக செயல்படுத்தியதும் நினைவுக்கு வந்தது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளித்ததில் ஜப்பான் நாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. அதற்காக அன்றைய துணை முதல்வரும் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொண்டார். சென்னையின் போக்குவரத்து வளர்ச்சியில் தொலைநோக்குப் பார்வையுடன் கலைஞர் செயல்பட்டிருந்ததையும் நினைக்க வேண்டியிருந்தது.

அதேநேரத்தில், “மெட்ரோ ரயில் திட்டம் வேஸ்ட்” என்றும் மோனோ ரயில்தான் சரிப்பட்டு வரும் என்றும் சொன்ன அம்மையார் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சியில் மோனோ ரயில் திட்டத்திற்கு எந்தப் பணியும் செய்யாமல் கலைஞர் கொண்டு வந்த மெட்ரோ ரயில் திட்டத்தைத்தான் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

உள்ளங்கை ரேகை போல மெட்ரோ ரயில் வழித்தடங்களைக் கொண்ட ஜப்பானில் மோனோ ரயில்களும் ஓடுகின்றன.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தலைமுறை தாண்டி பயனளிப்பது உலக வழக்கம். சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணா சாலையில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் (ஜெமினி ஃப்ளைஓவர்) இன்றும் போக்குவரத்து நெரிசலில் இருந்து சென்னையின் இதயப்பகுதியை மீட்டு, மூச்சு விடச் செய்கிறது. அதுபோல கிண்டியில் கட்டப்பட்ட பட்டாம்பூச்சி வடிவிலான கத்திப்பாரா மேம்பாலம் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதுடன், சென்ட்ரல் ஸ்டேஷன்-எல்.ஐ.சி. கட்டடம்-மெரீனா பீச் போன்றவையே சென்னையின் அடையாளம் என்ற நிலையை மாற்றி, சென்னையின் ஆச்சரியமிக்க அடையாளமாகத் திகழ்கிறது.

கலைஞரின் முயற்சியால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் முனைப்பினால் கட்டப்பட்ட ஒரு கத்திப்பாரா மேம்பாலம் கட்டமைப்பிலும், பயன்களிலும் ஆச்சரியமாக இருக்கிறது என்றால், டோக்கியோ நகரத்தில் பயணிக்கும்போது ஆச்சரியமளித்தன, சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கட்டப்பட்டிருந்த கத்திப்பாரா போன்ற மேம்பாலங்கள். நம்ம கத்திப்பாராவுக்கு அண்ணன்கள், அக்காள்கள் ஜப்பானின் பல நகரங்களிலும் உள்ளன.

நரித்தா விமான நிலையத்திலிருந்து டோக்கியோ நகரத்திற்கு வரும் வழியில் பல மேம்பாலங்களைப் பார்க்க முடிந்தது. சிலவற்றைக் கடந்து வர வேண்டியிருந்தது. காரில் பயணிக்கும்போது நண்பர் குன்றாளன் அந்தப் பாலங்களின் கட்டமைப்பு பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். அடிக்கடி பூகம்பத்தை எதிர்கொள்ளும் ஜப்பான் நாட்டில் கட்டப்படும் உயரமான கட்டடங்கள், பாலங்கள் ஆகியவை உறுதியானதாக இருப்பதுடன், நில அதிர்வின்போது அதனைத் தாங்கக்கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனால் இணைப்பு பகுதிகள் ரப்பர் போன்ற தன்மையுடன் கட்டமைக்கப்படும்.

புயல் காற்றுக்கு ஈடு கொடுத்து, ஒடிந்து விடாமல், வளைந்து நிமிரும் ஆற்றோர நாணலைப் போல, பூகம்பத்தின்போது இடிந்துவிடாமல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையில் ஜப்பானின் பாலங்களும் கட்டடங்களும் உள்ளன. உறுதியானப் பகுதியையும் நெகிழ்வானப் பகுதியையும் தொட்டுப் பார்த்தும், தட்டிப் பார்த்தும் உணர்ந்து கொள்ள முடியும். மேம்பாலத்தில் பயணிக்கும் வாகனங்கள், பூகம்ப நேரத்தில் அதிருமே தவிர, கவிழ்ந்துவிடாது. அதற்கேற்ப மேம்பாலங்கள் ஈடுகொடுத்து நிற்கின்றன.

பொறியியல், மருத்துவம், மின்னணு, வாகனம் என எந்தத் தொழில்நுட்பமாக இருந்தாலும் அதனைத் தங்கள் மண்ணுக்கேற்பவும் மக்களுக்கேற்பவும் பயன்படுத்திக் கொள்வதில் ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை வர்த்தகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்குவதிலும் சூரர்கள்தான்.

govi lenin japan travel story 9

நிஷி கசாயில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தியபோது, பக்கவாட்டில் பட்டன்கள் இருந்தன. கொஞ்சம் ஆச்சரியமாக அதை நான் பார்த்தபோது, அதன் பயன்பாட்டை விளக்கினார் சகோதரர் டோக்கியோ செந்தில். இந்தியர்கள் போலத்தான் ஜப்பானியர்களும் கழிவறையில் தண்ணீரைப் பயன்படுத்தி உடலின் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர். மேற்கத்திய நாட்டினர் போல காகிதத்தால் துடைத்தெறிவதில்லை. அதேநேரத்தில், தண்ணீரை பயன்படுத்தும்போது கையால் சுத்தம் செய்ய வேண்டியதுமில்லை. கழிப்பிடத்தில் உட்காரும்போது சரியான முறையில் உட்கார்ந்து கொண்டால் போதும். காரியம் முடிந்ததும், பக்கவாட்டில் உள்ள பட்டனை அழுத்தினால், வெதுவெதுப்பான நீரைப் பீய்ச்சி அதுவே சுத்தம் செய்துவிடும். முன்பக்கம், பின்பக்கம் என எப்பக்கமாக இருந்தாலும் அதற்கேற்ற பட்டனை மட்டும் நம் கை விரல்கள் பயன்படுத்தினால் போதும். ஃப்ளஷ் செய்து, ஃப்ரஷ்ஷாக்கிவிடும்.

govi lenin japan travel story 9

அறிவியல் வளர்ச்சி அனைத்து மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதாக அமைய வேண்டியது அவசியம். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும். சிரமத்தைக் குறைக்க வேண்டும். உடலுழைப்புக்கு அசராத ஜப்பானியர்கள் தொழில்நுட்பத்தைத் தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்குப் பயன்படுத்தி, சிரமத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.

எல்லாவற்றிலும் தொழில்நுட்பம், எங்கு திரும்பினாலும் உயரமான கட்டடங்கள், சாலைகளில் பயணிக்கும்போது மேம்பாலங்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த வசிப்பிடங்கள் என இத்தனைக்கும் நடுவே டோக்கியோ நகரம் இயற்கையான ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

அந்த கேள்விக்குப் பதிலாக, “இதோ நான் இளமை தளும்பத் தளும்ப ஓடிக்கொண்டிருக்கின்றேனே..” என்றது ஒரு குரல். யார் அது?

“நான்தான்.. சுமிதா…”

(விரியும்  வரும் ஞாயிறு அன்று)

கட்டுரையாளர் குறிப்பு

govi lenin japan travel story 9

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share