பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை அருகே அழைத்து, ‘ நீ தான் என் தங்கச்சி’ என்று கூறி மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று ( ஆகஸ்ட் 9 ) இரவு சென்றார். கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவலை அறிந்த பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ”வாம்மா நீ தான் என் தங்கச்சி” என கூறியபடி ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவரின் இந்த செயலை பார்த்த அவரது ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.

நடிகர் வடிவேலு தற்போது இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் ஆகியோருடன் சந்திரமுகி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி படக்குழு அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு கலகலப்புடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்