”என் பயம் போனதற்கு இது தான் காரணம்”: சிம்பு சொன்ன சீக்ரெட்!

Published On:

| By Kavi

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது.

மாநாடு படத்திற்கு பின்னர், சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி  வெற்றி பெற்ற திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

கௌதம் மேனன் இயக்கத்தில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

vendhu thaninthathu kaadu movie 50th day success meet

சித்தி இதானி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவருடன் மலையாள நடிகர் சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஏற்கனவே சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வழக்கமாக காதல் கதைகளையே மிகவும் சுவாரஸ்யமாக இயக்கும் கௌதம் மேனன், சிலம்பரசனை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தில்  வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருந்தார்.

இந்த படத்திற்காக சிம்பு சுமார் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து சிறு வயது பையனாக நடித்திருந்தார்.

குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல், தற்போது வரை ரசிகர்கள் பலரது காலர் டியூன் ஆக மாறி உள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் சில விமர்சனங்களுக்கு மத்தியிலும், நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் ஒன்றையும், நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக வழங்கி கௌரவித்திருந்தார்.

படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

vendhu thaninthathu kaadu movie 50th day success meet

இதில் படக்குழுவினர் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், “இந்தக் காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே நான் நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

எல்லா இயக்குநர்களுக்கும் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்றக்கூடிய நல்ல காலகட்டம் இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.

தமிழ் சினிமா இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் வித விதமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் முன் ஒருவித பயத்தில் இருந்தேன். ஏனென்றால் ஹீரோவை முன்னிறுத்தும் வழக்கமான படமாக இல்லாமல் இப்படம் இருந்தது. ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க தொடங்கியுள்ளனர். அந்த ரசனை என் பயத்தை போக்கி படத்தை வெற்றியாக்கியுள்ளது” என்றார்.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு!

கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share