சில படங்கள் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்; சில நம்மை அழ வைக்கும்; சில படங்கள் வெறியும் வேட்கையும் கொள்ள வைக்கும்; மிகச்சில மட்டுமே மனதை நெகிழ்வுக்குள்ளாக்கி நிரந்தரமாகச் சில நல்ல குணங்களை நமக்குள் விதைக்கும்.
இயக்குநர் சசி தந்த ‘பிச்சைக்காரன்’ படம் அவற்றில் ஒன்று. அடிப்படையான மனித மாண்புகளில் நம்பிக்கை கொண்டவரிடத்தில் இந்தப் படம் உருவாக்கும் தாக்கத்தை இவ்வளவென்று அளவிட முடியாது.
அப்படிப்பட்ட ஒருவர் இந்தப் படத்தைப் பார்த்தபிறகு நிச்சயம் துளி அளவாவது தன்னில் மாற்றத்தை உணர முடியும். காரணம், மனிதருக்கு உபதேசம் செய்யாமல் வாழ்பவனுங்களில் பெறத்தக்க மாற்றங்களை முன்னிறுத்தியது ‘பிச்சைக்காரன்’ திரைக்கதை.
விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் அவரைக் கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்த்த படம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். சரி, இப்படம் அப்படியென்ன மாற்றங்களை முன்வைக்கிறது?
’பிச்சைக்காரன்’ கதை
ஒரு பெரிய செல்வந்தன். விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்ற தாயின் நிலையை எண்ணிக் கதறுகிறான். எவ்வளவோ பணம் செலவு செய்யத் தயாராக இருந்தும், மீண்டும் பழைய நிலைமையில் அவரைக் காண முடியாத துயரில் உழல்கிறான். அப்போது, ஒரு மனிதர் தனக்குத் தெரிந்த தீர்வொன்றை முன்வைக்கிறார்.
தன்னை வருத்திச் செய்யும் தியாகம் மூலமாகத் தாயின் உயிரைக் காக்க வேண்டுமென்று இறைசக்தியிடம் வேண்டிக்கொள்வதற்கு ஒப்பான செயல் அது. வேறொன்றுமில்லை, தனது செழிப்பான வாழ்வை மறந்து 48 நாட்கள் ஒரு பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்பதுதான் அம்மனிதர் சொன்ன தீர்வு.
’அந்த காலகட்டத்தில்’ ஒருபோதும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது; இது குறித்து எவரிடமும் உண்மையைப் பகிரக் கூடாது’ என்பது அவர் விதிக்கும் நிபந்தனை.
தாய் நலமுடன் வாழ வேண்டுமென்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அதனைச் செய்யத் தயாராகிறான் அந்த மனிதன். தன்னை அறியாத மனிதர்கள் மத்தியில் பிச்சைக்காரனாக வாழப் பிரயத்தனப்படுகிறான். அவர்களில் ஒருவராக மாறுவதற்கே சில காலம் ஆகிறது.
அதன்பிறகு, அந்த பிச்சைக்காரர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் என்னவென்று தெரிகிறது. அந்த வாழ்வின் நீள அகலங்கள் பிடிபடுகிறது. அதன் காரணமாக, வெளியுலகில் இருந்து வரும் சில அழுத்தங்களையும் அம்மனிதன் எதிர்கொள்ள நேரிடுகிறது.
அதையெல்லாம் மீறி, தனது 48 நாட்கள் விரதத்தை அந்த மனிதன் நிறைவு செய்தானா? இல்லையா? என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் கதை.
இதில் அருள் செல்வகுமார் எனும் பாத்திரத்தில் தாயின் உயிரைக் காக்கத் துடிக்கும் மகனாக விஜய் ஆண்டனி நடித்தார். அவரது தாயாக தீபா ராமானுஜம் தோன்றியிருந்தார். இந்த படத்தில் தீபா நடித்த காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஆனால், மொத்தக் கதையும் அவரைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது. அவரைக் கொண்டாடியது திரையுலகம்.
‘அம்மா சென்டிமெண்டை’ காண விரும்பியவர்களுக்குக் கரும்பாக இனித்தது இப்படம்.
மிகை உண்டு
கமர்ஷியல் படங்கள் என்றாலே ஏதோ ஒருவகையில் அவற்றில் ‘மிகைத்தன்மை’ இருக்கும். அதுவே, புத்திசாலிகளைத் திரையரங்குகள் பக்கம் ஒதுங்கவிடாமல் தடை போடுகிறது. ஆனால், எப்பேர்ப்பட்ட சிந்தனைவாதிகளையும் சில கமர்ஷியல் படங்கள் கட்டிப்போடும்.
’உங்கள் புத்திசாலித்தனத்தை வீட்டில் கழற்றிவைத்துவிட்டு என்னைப் பார்க்க வாருங்கள்’ என்று கட்டளை இடும். சசியின் ‘பிச்சைக்காரன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியது.
இதிலும் நிறைய ‘மிகைப்படுத்தல்’கள் உண்டு. லாஜிக் மீறல்கள் உண்டு. அதையெல்லாம் மீறி நம் மனதில் ஒய்யாரமாகப் புகுந்தது ‘பிச்சைக்காரன்’. காரணம், அதில் நிறைந்திருந்த ’மகா’ எளிமை. மிகச்சாதாரண மக்களின் ஏக்கங்களை, இயலாமைகளை, அறியாமைகளை, பெருமிதங்களைப் பேசியது அப்படம்.
அருளின் சித்தப்பா தான் இந்தக் கதையில் வில்லன். அவரிடம் ஒரு ஓட்டுநர் இருப்பார். முதலாளி செய்யும் தகிடுதத்தங்களையும் அவர் தனக்களித்த அவமானங்களையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்வார். முக்கியமான கட்டமொன்றில், அவரைத் திருப்பியடித்து தனது மனசாட்சியின் குரலை வெளிப்படுத்துவார்.
அதேபோல, ‘நீ எனக்கு இனிமே ரைட் இல்ல லெப்ட்டு’ என்று அவமானப்படுத்தும் ரவுடிகள் கும்பலின் தலைவனுக்குப் பதிலடி கொடுக்கத் துடிப்பார் ஒரு அடியாள். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கையில், தங்களிடம் மாட்டிய நாயகனைத் தப்பிக்க வைப்பார்.
இவ்விரண்டு பாத்திரங்களையும் யதார்த்த வாழ்வில் நேரில் காண்பது அரிது. ‘ஒருவேளை அப்பாத்திரங்கள் இப்படி செயல்பட நேர்ந்தால்..’ என்ற கற்பனையின் நீட்சியாக அவை இருக்கும். போலவே, நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் கூட நமக்கு அந்நியமாகவே தெரியும்.
அதற்குக் காரணம், ஒரு பிச்சைக்காரன் எப்படி ஒரு அழகான இளம்பெண்ணுடன் காதல் உறவு கொள்ள முடியும் என்ற நமது எண்ணம் தான். அதனைப் பிரதிபலிக்கும் வகையில், இதில் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் பாத்திரத்தைப் புகுத்தியிருப்பார் சசி.
பிச்சை எடுப்பவர்கள் யார்
எவ்வளவோ பணம் இருந்தும் ஒருவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் என்ற கேள்வி நாயகி சாத்னா டைட்டஸ் மனதில் எழும் இடம், திரைக்கதையில் மிக முக்கியமானது. அதற்குப் பதில் தேடும் பொருட்டு, அவர் தன்னைத்தானே பலவிதங்களில் சமாதானம் செய்துகொள்ள முயன்று தோற்பார்.
இறுதியாக, தன் தாயின் உயிரைக் காக்க வேண்டுமென்று கடவுளிடம் தனது காதலன் மன்றாடுவதற்கான ஒரு வழியே பிச்சையெடுப்பது என்று அறிந்ததும், அவரது மனம் அமைதியடையும். ஏனென்றால், லௌகீக வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமே பிச்சை கேட்பார்கள் என்ற அரதப்பழசான சிந்தனை அவரிடத்தில் இருக்கும். அதன்பிறகு, அந்த எண்ணமும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று காட்டியிருப்பார் இயக்குநர்.
பிச்சை எடுப்பது என்றால் பொதுவிடங்களில் கையேந்தி நின்றால் போதும் என்ற பொதுப்புத்தியை உடைத்தது ‘பிச்சைக்காரன்’ திரைப்படம். பிச்சை எடுப்பதற்காக வந்து நின்று, எவருமே தன்னைத் திரும்பிப் பார்க்காதபோதுதான் விஜய் ஆண்டனியின் பாத்திரம் அதனை உணரும்.
அதற்கடுத்த காட்சியில், ‘என்ன இந்த பக்கம் பூஸ்ட்டும் அந்த பக்கம் ஹார்லிக்ஸும் தொங்குது’ என்று அவரது செழிப்பான கன்னங்களைப் பார்த்துக் கிண்டலடிக்கும் மூர்த்தியின் பாத்திரம். ‘அவங்க போடுற காசுக்கு நமக்கு ரெண்டு கண்ணும் அவிஞ்சு போயிருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க’ எனும் தொனியிலமைந்த வசனங்கள், பிச்சையிடுவதற்கு முன்பாக அவர்களை நோட்டமிடுபவர்களைக் கிண்டலடிக்கும்.
அதேநேரத்தில், பிச்சை எடுப்பதைத் தொழிலாக நினையாமல் அதனை ஒரு வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பவர்களைக் கண்ணியத்துடன் காட்டியிருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் தனிப்பட்ட தத்துவார்த்த சிந்தனைகளுக்கு இயக்குநர் தந்த மரியாதை அது.
நல்லதொரு சமூக, பொருளாதாரப் பின்னணி கொண்ட வாழ்வை இழந்து தவிப்பவர்களே பெரும்பாலும் பிச்சைக்காரர்களாக நம் முன்னே நிற்கின்றனர். அவர்களுக்கான அரசியலையும் பேசியது இப்படம்.
நாயகன் உடன் திரியும் இரு பாத்திரங்கள், பின்னர் அவரது ஆலையில் வேலை செய்வதாக கிளைமேக்ஸில் காட்டியிருப்பார் இயக்குநர். அதன் வழியே, பிச்சைக்காரர்களின் புனர்வாழ்வு சாத்தியம்தான் என்பதை மிகச்சன்னமாக உணர்த்தியிருப்பார்.
’சிவப்பு மஞ்சள் பச்சை’யில் ஆண்கள் நைட்டி உடுத்துவதை ஏன் அவமானமாகக் கருத வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சசி, இந்த படத்தில் அதிகார பீடங்களில் அமர்ந்திருக்கும் அரசு அதிகாரிகள் செல்வாக்கு மிகுந்தவர்களுக்குத் தரும் அதிகப்படியான மரியாதையைக் கேள்விக்கு உட்படுத்தியிருப்பார்.
’அவன் பணக்காரன்னு மறந்தும் சொல்லிடாத’. ஒரு காவல் துறையைக் காட்டி, மருத்துவ மாபியா கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது ஆளிடம் இதனைச் சொல்லுவார்.
போலவே, அதுவரை தன்னைப் புழுவாக நினைத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்று தெரிந்து மன்னிப்பு கேட்க முயல்வதை நாயகன் புறக்கணிப்பதாக, இன்னொரு காட்சியில் குறிப்பிட்டிருப்பார் இயக்குநர்.
காவல் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அரசுப் பதவியைக் கொண்டு நலிந்தவர்களை நசுக்கிவிடலாம் என்ற மனநிலை கொண்ட எந்தவொரு நபருக்கும் இது பொருந்தும். மிகச்சாதாரணமான ஒரு பார்வையாளரை அப்படியே ‘அலேக்’காக தூக்கி இமயத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லும் இது போன்ற காட்சிகள். அவரைப் பணக்காரராக உணரச் செய்யும்.
’அம்மா’ செண்டிமெண்ட் மட்டுமல்லாமல், இது போன்ற எண்ணற்ற அம்சங்களே இன்றும் ‘பிச்சைக்காரன்’ படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது. அது என்றென்றைக்குமான ஒன்றாக மாறும் பட்சத்தில் நிச்சயம் இப்படம் ‘கல்ட்’ அந்தஸ்தைப் பெறும்.
தனது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகைமையில் அமைய வேண்டுமென்பதில் உறுதி கொண்டுள்ள தமிழ் இயக்குநர்களில் சசியும் ஒருவர். ‘சொல்லாமலே’ முதல் அடுத்து அவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘நூறு கோடி வானவில்’ வரை அனைத்துக்கும் இது பொருந்தும்.
அந்த வகையில், அம்மா சென்டிமெண்டை அடிநாதமாகக் கொண்ட ஒரு கதையில் மனித உறுப்புகள் திருட்டு, பிச்சையெடுக்கும் மக்களின் வாழ்க்கையனுபவங்கள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அரசு அதிகாரிகள் தரும் மரியாதை உட்படப் பலவற்றைப் பேசிய ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை உறவினையும் நட்பினையும் போற்றும் மனப்பாங்கு கொண்ட எவரும் தம்முடையதாக ஏற்றுக்கொள்வர்.
அதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், ‘பிச்சைக்காரன்’ படத்தை மனதிலொரு முறை ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கலாம்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: இப்டியே உசுப்பேத்தி பிரிச்சி விட்றாதீங்க? திமுக அமைச்சர் சொன்ன கூட்டணி மேட்டர்
மோடி இதற்காகத்தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் : ஸ்டாலின்