தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக கலக்கி கொண்டு இருந்த நடிகர் சந்தானம் சமீப காலமாக ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வசூலை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் “இங்க நான் தான் கிங்கு” என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “இந்தியா பாகிஸ்தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் நாராயண் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
“இங்க நான் தான் கிங்கு” படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான “சரிகம” கைப்பற்றி இருப்பதாக படக் குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
வழக்கம்போல சந்தானம் ஸ்டைலில் காமெடி கலந்த முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார். நடிகர்கள் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கிக், பில்டப், வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் நிச்சயம் வெற்றி திரைப்படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா