தியேட்டர்களில் திருவிழாக் கோலம்!
திரையில் ஒரேநேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்தி உட்பட பல மொழித் திரைப்படங்களில் இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, மலையாளத்தில் இப்படிப்பட்ட படங்கள் அதிகம். ஆனாலும், யார் கண் பட்டதோ தெரியவில்லை; அங்கும் சமீபகாலமாக நட்சத்திர ஹீரோக்கள் ‘சோலோ’ பெர்பார்மன்ஸ் பாதையில் பயணித்து வருகின்றனர். அதனைத் தடம் புரட்டும்விதமாக, மூன்று இளம் நாயகர்களை ஒன்றாக இணைத்திருக்கிறது ‘ஆர்டிஎக்ஸ்’.
ஓணம் வெளியீடாக வந்திருக்கும் இப்படம் தியேட்டர்களில் திருவிழாக் கோலத்தை உருவாக்கியிருக்கிறதா?
ட்ரெய்லர் சொன்ன கதை!
மூன்று நண்பர்கள். ஒரு பகையாளியின் மோதல் என்றால் மூவரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கல்லூரிக் காலம் தாண்டி ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். அதற்கு, ‘பழிக்குப் பழி’ வாங்கும் விதமான ஒரு சம்பவம் காரணமாக அமைகிறது. இதுதான் ‘ஆர்டிஎக்ஸ்’ ட்ரெய்லர் நமக்குச் சொன்ன கதை.
கிட்டத்தட்ட படமும் அப்படித்தான் இருக்கிறது. இந்த கதையில் ‘ஆர்டிஎக்ஸ்’ என்பது ராபர்ட் (ஷேன் நிகம்), டோனி (ஆண்டனி வர்கீஸ்) மற்றும் சேவியர் (நீரஜ் மாதவ்) ஆகியவற்றின் சுருக்கமே. மூவரில் ராபர்ட்டும் டோனியும் சகோதரர்கள். அவர்களது பெற்றோர் பிலிப் – குஞ்சுமோள் (லால் – மாலா பார்வதி) கொஞ்சம் வசதியான பின்னணி கொண்டவர்கள். சேவியரின் தந்தை ஆண்டனி (பாபு ஆண்டனி) ஒரு கராத்தே பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். பிலிப்பும் ஆண்டனியும் நண்பர்கள் என்பதால் அவர்களது பிள்ளைகள் ஒன்றாகவே வளர்கின்றனர்; நட்பு பாராட்டுகின்றனர்.
கல்லூரியில் மினி (மஹிமா நம்பியார்) எனும் பெண்ணோடு ராபர்ட்டுக்கு காதல் ஏற்படுகிறது. அதனால், மினி வசிக்கும் மஹாராஜா காலனியைச் சார்ந்தவர்களோடு அவருக்கு மோதலும் உருவாகிறது. ஒருமுறை அவர்களுக்கும் ‘ஆர்டிஎக்ஸ்’ஸுக்கும் இடையே மோதல் நடக்க, விஷயம் காவல்நிலையம் வரை செல்கிறது. அதையடுத்து, உள்ளூரில் ராபர்ட் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து எனும் நிலை உருவாகிறது. அதற்கேற்றவாறு, அவரும் பெங்களூர் சென்றுவிடுகிறார். டோனியின் திருமணத்தில் கூட கலந்துகொள்ளவில்லை.
சில ஆண்டுகள் கழித்து, ராபர்ட் மீண்டும் ஊருக்கு வருகிறார். அதற்கு, அவரது குடும்பத்தினர் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டதே காரணம். தாக்கியது யார் என்று அறிய முற்படும்போது, அவரும் டோனியும் மஹாராஜா காலனிக்குள் நுழைய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘ஆர்டிஎக்ஸ்’.
ஆக, ட்ரெய்லரில் சொல்லப்பட்ட கதைக்கும் படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அவ்வளவு ஏன், ஆக்ஷன் காட்சிகளின் நேரம் கூட அதே விகிதத்தில்தான் அமைந்திருக்கிறது.
ஆக்ஷன் அதகளம்!
’ஆர்டிஎக்ஸ்’ஸில் ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மூவருக்கும் காட்சிகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தாலும் திரைக்கதையில் சம அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே நடிக்கும் வாய்ப்பு அமைந்தாலும், வெறுமனே பாத்திரங்களாக மட்டுமே திரையில் தோன்றுகின்றனர். ’பில்ட் அப்’ ஷாட்கள் இருந்தாலும், வசனங்கள் அவ்வாறு அமைக்கப்படாதது ஆறுதல்.
ஆண்டனியின் ஜோடியாக வரும் ஐமா ரோஷ்மி செபாஸ்டியனுக்கும், ஷேன் நிகம் ஜோடியான மஹிமா நம்பியாருக்கும் கூட சரியான அளவிலேயே வாய்ப்பு தரப்பட்டிருப்பது ஆச்சர்யம். இருவரும் திரையில் பாந்தமாகத் தோன்றியிருப்பதும் சரியான அளவில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் லால், பாபு ஆண்டனி, மாலா பார்வதி, பைஜு, சுஜித் சங்கர் என்று பலர் நடித்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள விஷ்ணு அகஸ்தியாவுக்கு இனி தமிழ், தெலுங்கில் அதிக வாய்ப்புகள் வரலாம்.
அலெக்ஸ் ஜே.புல்லிக்கல்லின் ஒளிப்பதிவு, சமான் சாக்கோவின் படத்தொகுப்புடன் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் இணையும்போது கனகச்சிதமான ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி உடனடியாக எழுகிறது. உண்மையைச் சொன்னால், பின்னணி இசையே இப்படத்தின் நாயகர்களையும் தாண்டி முன்னே நிற்கிறது. மேலும், சாம் இசையமைத்த இரண்டு பாடல்களும் கூட சட்டென்று நம்மைக் கவரும் ரகமாக உள்ளது.
தேவாலயத் திருவிழா, கராத்தே பயிற்சிக்கூடம், மருத்துவமனை, படகு குழாம், காலி மைதானம் போன்றவற்றின் பின்னணியில், அன்பறிவ் மற்றும் இர்பான் அமைத்துள்ள சண்டைக்காட்சிகள் நம்மைச் சட்டென்று ஈர்க்கின்றன. குறிப்பாக, நெருக்கமான குடியிருப்புகள் நிறைந்த தெருவில் உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சி ‘ஆக்ஷன் அதகளம்’ ஆக அமைந்துள்ளது. ஆனாலும், ஹீரோக்கள் சுருண்டு கீழே விழுவதும் அந்தரத்தில் பாய்வதும் ‘பழைய படம்’ பார்த்த உணர்வை ஊட்டுகின்றன. அவற்றைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
தொண்ணூறுகள் மற்றும் 2000ஆவது ஆண்டை வேறுபடுத்திக் காட்ட உதவியிருக்கிறது செடியன் பால் – கெவின் பால் தயாரிப்பு வடிவமைப்பு. இயக்குனர் நஹாஸ் ஹிதாயத்தின் கதைக்குத் திரையரங்குகளில் கைத்தட்டல்கள் கிடைக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறது ஆதர்ஷ் சுகுமாரன் – ஷபாஸ் ரஷீத் இணை.
திருப்தி கம்மிதான்!
‘ஆர்டிஎக்ஸ்’ படத்தில் வழக்கத்திற்கு மாறான அம்சங்கள் எதுவும் இல்லை. ’அங்கமாலி டயரீஸ்’ பாணியில் இதன் திரைக்கதை தொடங்கினாலும், அதன்பிறகான காட்சிகள் ஆங்கிலத்தில் ட்வெய்ன் ஜான்சன் நடித்த படங்கள் முதல் நம்மூரில் எண்பதுகளில் வெளியான பல ‘மல்டி ஸ்டார்’ கமர்ஷியல் படங்களையே நினைவூட்டுகின்றன.
இரண்டுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் ஒன்றாகச் சேரும்போது திரையில் என்னவெல்லாம் நிகழும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ, அவை அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. கடைசியாக, தமிழில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ அப்படியொரு கமர்ஷியல் படமாக அமைந்தது.
ஒருகாலத்தில் பாபு ஆண்டனி மலையாளத்தில் ‘ஆக்ஷன் ஹீரோ’வாக திகழ்ந்தாரே என்ற யோசனை மண்டைக்குள் ஓடும்போது, திரையில் அவர் முஷ்டி முறுக்கி மோதலுக்குத் தயாராவது ஒரு உதாரணம்.
இன்னும் கனமான கதையோடு களமிறங்கியிருந்தால் இப்படம் பார்த்தபிறகு ஒரு ‘திருப்தி’ உருவாகியிருக்குமோ என்றும் கூடத் தோன்றுகிறது. அதேநேரத்தில், தியேட்டரை அதிரவைக்கும் கைத்தட்டல்களும் கூக்குரல்களும் ‘இதுவே போதும் என்றாகிவிட்டதோ’ என எண்ண வைக்கிறது.
‘ஆர்டிஎக்ஸ்’ பார்த்து முடித்தவுடன், புதுமுகமாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியையும் எப்படி ரசித்து இழைத்திருக்கிறார் என்றே இயக்குனர் நகாஸ் ஹிதாயத்தைப் பாராட்டத் தோன்றியது. அந்தப் பற்றுதல் தான் ஒரு படத்தை மிக நேர்த்தியானதாக மாற்றும்.
ஷேன், ஆண்டனி, நீரஜ் மூவரையும் ஒரு பிரேமுக்குள் அடக்கியது போல, தமிழிலும் சில இளம் நாயகர்களை ஒரு கமர்ஷியல் திரைக்கதைக்குள் நிறைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தலைகாட்டுகிறது. கூடவே, அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஆக்ஷன் ‘பில்ட்அப்கள்’ அமைக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்றும் தோன்றுகிறது. இப்படி எண்ண வைக்கும் அளவுக்கு தியேட்டர்களை திருவிழா கோலம் பூண வைத்திருக்கிறது ‘ஆர்டிஎக்ஸ்’. நிச்சயமாக, வேறு மொழிகளில் டப்பிங் ஆனாலும் இப்படம் வரவேற்பைப் பெறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
சூரியனுக்காக செல்லும் ஆதித்யா எல்1: தேதி குறித்த இஸ்ரோ!
பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா