’வேட்டையன்’ படம் குறித்த பேட்டிகளில் இது ஒரு ‘கன்டென்ட் ஓரியண்டெட் ரஜினி படம்’ என்கிற வாக்கியம் தான் அதிக முறை இயக்குநர் ஞானவேலால் சொல்லப்பட்ட வாக்கியமாக இருக்கும். படத்தின் டிரெய்லர் கூட வழக்கமான ரஜினி படத்திற்கான எந்த வித ஆரவாரமும் இன்றி அமைக்கப்பட்டது . ஆக, நிச்சயம் வழக்கமான ஒரு ரஜினி படமாக இது இருக்காது என்கிற எண்ணத்துடன் ’வேட்டையன்’ திரைப்படத்தை பார்க்கச் சென்றோம்.
எலைட் பார்வையாளர்கள் மட்டும் வரும் அந்த புகழ்பெற்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களின் கூச்சலுக்கும், ஆரவாரத்துக்கும் மத்தியில் ஓடிய 20 நிமிட நேர விளம்பரங்களைத் தொடர்ந்து ‘வேட்டையன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
ஒன்லைன்
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான ரஜினியிடம் ஒரு முக்கியமான கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் ஒரு நபரை என்கவுண்டர் செய்யும் அசைன்மெண்ட் வருகிறது.
ஒரு வகையில், அந்த கொலை செய்யப்பட்ட நபருடன் ரஜினிக்கும் தொடர்புண்டு. இந்த நிலையில், அந்த குற்றம் சாட்டப்பட்ட நபரை கண்டுபிடித்து என்கவுண்டர் செய்கிறார் ரஜினி. அதற்கு பிறகு நடக்கும் திருப்பங்கள், அந்த கொலைக்கு பின்னால் இருக்கும் கல்வி மாஃபியா, அதை ரஜினி எப்படி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார் என்பதே ‘வேட்டையன்’ .
அனுபவ பகிர்தல்
ஒரு வழக்கத்துக்கு மாறான ரஜினி படத்தை பார்த்த அனுபவம் மிகப் புதுமையாக, முதல் பாதி வரை சுவாரஸ்யமாகக் கூட இருந்தது. குறிப்பாக எந்த வித ஆரவாரமும் இன்றி இருந்த இடைவேளை காட்சி சிறப்பாகவே அமைந்தது. பொதுவாக பெருத்த ஆரவாரத்துடன் பார்க்கும் ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியாக இம்முறை அமையவில்லை.
மாறாக, ஒரு கதையில் நடக்கும் பிர்ச்சனைகளுக்குள் ரஜினி எப்படி வருகிறார் என்பது போல் அமைக்கப்பட்ட திரைக்கதை ரசிக்க வைத்தது. சமீபத்தில் வந்த ரஜினி படங்களில் ரஜினியை கொஞ்சம் இளமையாக பார்த்தது இந்தப் படத்தில் தான். ஆனால், அந்த இளமை நடிப்பில் எதிரொலிக்கவில்லை என்பது சோகம்.
பொதுவாக போலீஸ் கதைகளில் என்கவுண்டரை ஹீரோயிசத்திற்கான அடையாளமாக காட்டும் தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்டு காட்டும் விதம் இயக்குநரின் டச். ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் செய்யும் அனைத்து சேட்டைகளும் படத்தை மேலும் ரசிக்க வைத்தது. அவர் கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப அவரே இந்தப் படம் சோர்வாகும் போது சார்ஜ் ஏற்றும் ‘பேட்டரி’ – யாக உள்ளார்.
ஒரு போலீஸ் விசாரணை எப்படி நடக்கும்? அதனுள் இருக்கும் விதிகள், செயல்முறைகளை கொஞ்சம் விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் காட்ட முயன்றது சிறப்பு. படத்தில் என்கவுண்டர், கல்வி மாஃபியா, அடையாள அரசியல், நீதி, நீட் கல்விமுறை, கும்பல் மனநிலை போன்ற பல்வேறு விஷயங்கள் சார்ந்த கருத்துகள் காட்டப்படாமல் கூறப்பட்டது சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியதை தவிர்க்க முடியவில்லை.
விரிவான விமர்சனம்
ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஷ்ட்டை கதாநாயக பாத்திரமாக வைத்துக் கொண்டு என்கவுண்டருக்கு எதிரான கருத்தை சொன்னதே இந்தப் படத்தை கமர்சியல் படங்களில் புதிய அணுகுமுறை கொண்ட படமாக பார்க்க வைக்கிறது. குறிப்பாக, ரஜினி படத்தில் ஒரு புதுமையான அணுகுமுறையை கடைசியில் ‘கபாலி’, ‘காலா’ போன்ற திரைப்படங்களில் தான் பார்க்க முடிந்தது.
முன்பு சொன்னது போலவே சமீபத்தில் வந்த படங்களில் இந்தப் படத்தில் தான் ரஜினி மிக இளமையாக தெரிகிறார். ஆனால், அவரது நடிப்பில் அந்த இளமை எதிரொலிக்கவே இல்லை. எமோசனல் காட்சிகளில் கூட ரஜினியின் நடிப்பு கொஞ்சம் சுமாராகத் தோன்றுவது ஏன் எனத் தெரியவில்லை. ஆனால், அவருக்கான ரஜினி மொமெண்ட்களில் முடியைக் கோதி, கிளாஸை போட்டு, ஸ்லோ மோஷனில் நடந்து ரசிகர்களை திருப்திப் படுத்தவும் தவறவில்லை.
படத்தில் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் மட்டுமே மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றது போல் அவரும் அதில் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். படத்தின் சீரியஸான இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டர்ஸ், சேட்டைகள் ரசிகர்களை படத்தோடு ஒட்ட வைக்கிறது. மிகக் கம்மியான காட்சிகள் கொண்ட மஞ்சு வாரியர் ஒரே காட்சியில் மாஸ் காட்டுகிறார். படத்தின் முக்கியமான, அழுத்தமான கதாபாத்திரமான துஷாரா விஜயன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்திற்கு அவரின் இத்தனை ஆண்டு கால ஆளுமை திரையில் உதவி செய்கிறது. ஆனால், சில வசனங்களில் டப்பிங் பிரச்சனைகள் வருவது கொஞ்சம் துருத்தலாக இருந்தது.
எந்த வித வித்யாசமான ஒளிப்பதிவு முறைகளையும் கையாளாமல் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு நன்று. சண்டைக் காட்சிகளில் மெட்ரோ சப்வேவில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. படம் தொடங்கி சில நிமிடங்களுக்கு நம்மால் படத்தோடு ஒன்றமுடியாமல் இருந்ததற்கு வழக்கமான சில காட்சியமைப்புகளே காரணம். ஆனால், அதற்கு பிறகு நடக்கும் ஒரு கொலை,
அதற்கான விசாரணை என நம்மை முதல் பாதி வரை சுவாரஸ்யம் அடையச் செய்கிறார் இயக்குநர். ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை வெகு நீளமாக நீண்டுகொண்டிருக்கும் உணர்வு சில மணி நேரங்களில் நமக்கு வந்து விடுகிறது. போலீஸ் விசாரணை முறை வரை மிக நுணுக்கமாக காட்ட முயலும் இயக்குநர் மீடியா எப்படி வேலை செய்யும்? ஒரு காவல் துறை எஸ்.பி யின் அதிகாரம் என்ன? என்கவுண்டர் நடத்தப்படும் முறை, இன்ன பல லாஜிக் பிரச்சனைகள் ஆகியவற்றை கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.
குறிப்பாக ஒரு எம்ஜிஆர் காலத்து கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் இருப்பது ஏற்புடையது அல்ல. எம்ஜிஆர் படங்களில் வில்லன் ஒரு காரில் ஏறி வெகு தூரம் சென்று, பின் அங்கிருந்து கப்பலில் ஏறி கடல் வழியில் பல தூரம் சென்று அங்கிருந்து விமானத்தில் ஏறிப் பறந்து ஒரு ஆள் இல்லாத நிலத்தில் இருக்கும் ஒரு குடவுனுக்கு சென்றால் குடவுனை உடைத்துக் கொண்டு உள்ளே குதிப்பார் எம்ஜிஆர். ஏறத்தாழ அதைப் போன்ற ஒரு காட்சி இந்தப் படத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒரு என்கவுண்டருக்கு எதிரான படத்தில் காட்டப்படும் என்கவுண்டர் காட்சிகள் மிக அழுத்தமாக இருக்க வேண்டாவா? அதை வழக்கமான தமிழ் சினிமா போல் காட்சிப்படுத்தி விட்டு பின்னர் அதே என்கவுண்டருக்கு எதிரான கருத்துகளை அதே படத்தில் கூறுவது சற்று முரணாகவும், அழுத்தமில்லாமலும் இருந்தது. சரி, ரஜினி படத்தில் அவருக்கான ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது புரிகிறது. ஆனால், அதுவே படத்தின் கருத்துக்கு சற்று முரணான உணர்வையும் கடத்தக் கூடும் என்பதை அவசியம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஒரு என்கவுண்டர் தரும் குற்ற உணர்ச்சி, காவல்துறையினரின் மன அழுத்தம், உளவியல் சிக்கல் போன்றவைகளை மிக அழுத்தமாக பதிவு செய்வதற்கான பல இடங்கள் இந்தப் படத்தில் இருந்தும் அதை சரியாக பதிவு செய்யவில்லை. எமோஷனல் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு அந்த உணர்வை அழுத்தமாக கடத்தவில்லை. நீண்டு கொண்டே போகும் இந்த இரண்டாம் பாதியில் வரும் விசாரணை காட்சிகள், மெட்ரோ சப்வேவில் நடக்கும் சண்டை காட்சி, ஒரு சில ரஜினியின் டிரேட் மார்க் மொமெண்ட்கள் மட்டுமே ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில், இந்த ‘வேட்டையன்’ காவல்துறை ‘வேட்டை துறை’ யாக இருக்கக் கூடாது என்கிற கருத்தை சொல்ல முயன்றுள்ளது. ஆனால், கமெர்சியல் கலவையில் மதில் மேல் பூனையாகிறது. வித்தியாசமான ரஜினி படத்தை பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
ஆளுநருடன் மோதல் போக்கு தேவையில்லை : உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!