தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகா பிரபலமாக இருந்தபோதே 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கதையின் நாயகியாக வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் ’36 வயதினிலே’ படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து ’மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’காற்றின் மொழி’, ’ராட்சசி’, ’ஜாக்பாட்’, ’பொன் மகள் வந்தாள்’, ’உடன்பிறப்பே’ ஆகிய படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போது மலையாளத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருக்கும் செய்தியை அவரது பிறந்தநாளான நேற்று (அக்டோபர் 18) நடிகர் மம்முட்டி அதிகாரபூர்வமாக படத்தின் பெயருடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் தயாராகும் படத்திற்கு ‘காதல் தி கோர்’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்குகிறார்.
படம் சம்பந்தமான பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. 71 வயதாகும் மம்முட்டி ஜோடியாக 44 வயது ஜோதிகா நடிப்பது வழக்கம்போல விவாத பொருளாக மாறியிருந்தாலும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்கிற தேடல் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயல்பாக நடிக்கக் கூடிய இரண்டு திரைக்கலைஞர்கள் இணைந்திருப்பது மலையாள சினிமா ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
–இராமானுஜம்