தங்கலான் ஓடிடி ரிலீஸ்… க்ரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்!

Published On:

| By Selvam

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 21) உத்தரவிட்டுள்ளது.

இந்த வருடம் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழகத்தில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. வட ஆற்காடு மாவட்டங்களில் இருந்து கோலார் தங்கவயலுக்கு வேலைக்கு சென்ற தலித் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும் மாய யதார்த்தவாத புனைவு கலந்து ரஞ்சித் இப்படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார். தங்கலான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையில், தங்கலான் ஓடிடி ரிலீஸில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் படம் இன்னும் நெட்பிளிக்ஸில் வெளியாகமல் இருக்கிறது.

இந்தநிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், “தங்கலான் படத்தில் புத்தமதம் குறித்து புனிதமாகவும், வைணவ மதம் குறித்து நகைச்சுவையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும். அதனால் தங்கலான் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தங்கலான் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெற்று தான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதனால் படத்தை ஓடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை” என்று உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்கலான் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கவரப்பேட்டை ரயில் விபத்து சதியா?: க்யூ பிரிவு போலீசார் சொல்வது என்ன?

அதிமுகவில் கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel