நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் தெலுங்கு திரையுலக மூத்த நடிகர் சிரஞ்சீவி வரை என பல்வேறு திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு பரிந்துரை செய்ததின் பேரில், மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் நாளை (நவம்பர் 23) காவல்நிலையத்தில் ஆஜராக கோரி அதற்கான சம்மனை வழங்க நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு இன்று போலீசார் சென்றனர். ஆனால் மன்சூர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மன் நகலை சமர்ப்பித்து திரும்பினர்.
இதுதொடர்பாக மன்சூரின் நெருங்கிய வட்டாரத்தில் தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது, ’அவரை இப்போது தொடர்பு கொள்ள முடியாது” என்று ஒற்றை வரியில் பதில் தெரிவித்துள்ளனர்.
நடிகை த்ரிஷா குறித்து பேசியதற்கு விளக்கம் கொடுத்தும், மன்சூருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விசித்ராவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர் இவரா? திடுக்கிடும் தகவல்!
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!