அமரன் முதல்நாள் வசூல் சாதனை : கமல் உருக்கம்!

Published On:

| By christopher

Kamalhassan thanked fans for Amaran's first day collection record

அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன்.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரான இத்திரைப்படம் தீபாவளி திருநாளான நேற்று (அக்டோபர்) வெளியானது.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.42.3 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image

இதனையடுத்து கமல்ஹாசன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு இன்று (நவம்பர் 1) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்த போது சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும். சில வேலைகள் கெளரவத்தையும், பெருமையையும் தரும்.அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்” என்று சொன்னேன்.

1000 நாட்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தத் தேசத்திற்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் எய்தியவர். அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர். உயிர் நட்பைப் பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை.

மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும். அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கைதான் அமரன்.

இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும்தான்.

ஒரு நிஜமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டப் போகிறோம் என்பதை உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் தம்பி சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்தப் படத்திற்கான அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்குப் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.

amaran team

மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்தத் தேசமே போற்றிய இரும்புப் பெண்மணி, அத்தனை இழப்புகளுக்கும் மத்தியில் நானொரு ராணுவ வீரனின் மனைவி எனும் பெருமிதத்தைத் தன் அடையாளமாக அணிந்து கொண்ட வீரமங்கை. அவரது பாத்திரமாகவே மாறி இருக்கிறார் சாய்பல்லவி. அவர் கதாநாயகியாக அமைந்தது இந்தப் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

தனது இசையினால் இந்தப் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் தம்பி ஜி.வி. பிரகாஷ். தனது முதல் படத்துக்குக் காட்டிய அக்கறையை, உழைப்பை ஒவ்வொரு படத்துக்கும் கடைபிடிக்கிறார்.

என்னுடைய இளவல் ராஜ்குமார் பெரியசாமியின் திறமையை நான் ஏற்கனவே நன்கு அறிந்ததன் விளைவுதான் அமரன். ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை திரைப்படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல. விரிவான ஆய்வுகள், களப்பணிகள் செய்து, தரவுகளைத் திரட்டி அவற்றைத் தொகுத்து சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

படப்பிடிப்பு நடத்த சவாலான நிலப்பகுதிகளில், எண்ணற்ற தடைகளை மீறி தன் நெஞ்சில் சுமந்த அமரன் எனும் அனலை மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான ஒரு சுடராக ஏற்றி இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் தீவிரமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக்கனவு அல்ல.

இயக்குனர், கதாநாயகன், தயாரிப்பாளர் தொடங்கி மொத்த அணியுமே நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய சாய், எடிட்டர் கலை உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் அர்ப்பணிப்புடன் உழைத்து அமரன் எனும் பொதுக்கனவைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

இந்தியா பண்டிகைகளின் தேசம். நாம் குடும்பத்துடன் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்து நிற்கும் நமது ராணுவ வீரர்களையும், நமது அன்றாட வாழ்க்கை சீராக இயங்கக் காரணமாக இருக்கும் மக்கள் பணியாளர்களையும், அல்லும் பகலும் உழைக்கும் முன்களப் பணியாளர்களையும் நன்றியோடு நினைத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களது வீரத்தையும்,தியாகத்தையும், பங்களிப்பையும் போற்ற இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாமறியாத ராணுவ வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும், எனது சகோதரர் ஆர்.மகேந்திரனும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம்.

திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் எனும் எனது நம்பிக்கை உறுதியாகியுள்ளது. ரசிகர்களுக்கு என் நன்றி” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆட்சி அதிகாரத்தில் பங்கு : விஜய் பேச்சை வரவேற்ற செல்வப்பெருந்தகை

அமரன் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share