காலங்கள் மாறலாம்.. காதல் மாறாது..!
சில நடிகர்கள், நடிகைகள் பிரதான வேடங்களில் நடித்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகையில், ‘இது வித்தியாசமான படமாக இருப்பது நிச்சயம்’ என்ற எண்ணம் தோன்றும். சில வெற்றிகளை அவர்கள் கண்டபிறகும் அந்த அணுகுமுறையில் மாற்றம் இராது. அப்படியொரு நடிப்புக்கலைஞராக விளங்குபவர் வெற்றி. எட்டு தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்கள் இவரது கதைத் தேர்வு இதர நாயகர்களிடம் இருந்து விலகி நின்றதை உணர்த்தியது. அந்த வரிசையில் இன்னொன்றாக இணைந்திருக்கிறது ‘ஆலன்’.
ஆர்.சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.
அனு சித்தாரா, மதுரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
எப்படியிருக்கிறது ‘ஆலன்’ தரும் அனுபவம்?!
பால்யத்தில் தாய், தந்தை, தாத்தா குறித்த நினைவுகளைப் பொக்கிஷமாகக் காக்கும் அளவுக்கு ஒரு வாழ்வைக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அந்த வயதில், அவனது ரசனையைப் புரிந்த ஒரு தோழியும் பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். பதின்மப் பருவத்தில் அவர்களது நட்பு இன்னும் நெருக்கமாகிறது.
அப்போது, ஒரு விபத்தில் அனைத்தையும் பறிகொடுக்கிறான் அந்தச் சிறுவன். வாழ்வே வெறுமையாகத் தோன்றுகிறது. உறவுகளும் கைகொடுப்பதாக இல்லை.
அந்த காலகட்டத்தில், அவன் நேசித்த தோழியின் தந்தை அவன் கைபிடித்து சென்னைக்கு அழைத்து வருகிறார். தனது நண்பரிடத்தில் அவனைச் சேர்ப்பிக்கிறார்.
வெறுமையைத் தவிர வேறெதுவுமில்லை என்றிருக்கும் அந்தச் சிறுவன், தன்னை ஆற்றுப்படுத்த ஒரு வழி தேடுகிறான். காசிக்கு ஓடிப் போகிறான். காலத்தோடு சேர்ந்து அந்தச் சிறுவனும் ஓடுகிறான். வளர்ந்து வாலிபன் ஆகிறான்.
வாலிபனான பிறகும், தான் தேடிய கடவுளைக் காணும் பாக்கியம் கிடைப்பதாக இல்லை. அதுவே கதி என்று மனதை ஒருநிலைப்படுத்துகையில், தன் கைவசமிருக்கும் எழுத்து மட்டுமே கடவுளை அடைவதற்கான வழி என்று கண்டறிகிறான். அப்புறமென்ன?
’காவி உடை தரித்திருப்பதே சக உயிர்களை நேசிக்கத்தான்..’ எனும் நினைப்போடு அந்த வாலிபன் சென்னை திரும்புகிறான். வரும் வழியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அந்தப் பெண், அவனை முற்றும் துறந்த துறவியாக எண்ணுகிறார். அவ்வாறு அவன் சிந்திக்கவில்லை என்பதை அறிந்து வியக்கிறார்.
அதேநேரத்தில், அவனிடத்தில் இருக்கும் தெளிவும் நிதானமும் அவரை ஈர்க்கிறது. மெல்ல இருவரும் நட்புடன் பழகத் தொடங்குகின்றனர். அது காதலாகவும் மாறுகிறது. அந்தக் கணத்தில், வெளியூருக்குத் தனியாகப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் பெண். பிறகு, அவரது மரணச் செய்தியை மட்டுமே அவன் கேட்கிறான்.
மீண்டும் அதே வெறுமை. ‘என் வாழ்வில் இனிமைக்கே இடமில்லையா’ என்று மனம் துவண்டு ஊர் ஊராகத் திரிகிறான். பிச்சை எடுத்து வாழ்கிறான். மீண்டும் துறவறம் பூணாத நிலை.
அப்போதும், சிறு வயதில் சந்தித்த அதே துறவியைச் சந்திக்கிறான். ‘உனது அடையாளம் எழுத்து தான். அதனைச் செய்’ என்று அவர் சொல்கிறார்.
தனது அத்தனை ஆண்டு கால அனுபவங்களையும், காதலியின் பெயரில் ஒரு நூலாக அவன் எழுதுகிறான். அந்த புத்தகம் வெளியானபிறகு பெரிதாகக் கொண்டாடப்படுகிறது.
பல நாட்கள் கழித்து, பதிப்புருவம் பெற்றிருக்கும் அந்த நூலைக் காண, அவன் சென்னை வருகிறான். அப்போது, ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைச் சந்திக்க நேர்கிறது.
அந்தச் சந்திப்பு நீண்டதாக அமைகிறது. அதன் தொடர்ச்சியாக, அவனைக் காதலுடன் நோக்குகிறார் அந்தப் பெண்.
அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? இதுவரை அவன் வாழ்வில் இருந்த வெறுமை, அதன்பிறகாவது தொலைந்ததா? அவர்கள் என்னவானார்கள் என்று சொல்கிறது ‘ஆலன்’.
காலம் துரத்துகிற சிறுவனாக, வாலிபனாக, இதில் வரும் பாத்திரத்தின் பெயர் தியாகு (வெற்றி). அவன் காதலிக்கும் ஜெர்மானியப் பெண்ணின் பெயர் ஜனனி தாமஸ் (மதுரா). மீண்டும் நடுத்தர வயதில் அவன் சந்திக்கும் பெண் செல்வி (அனு சித்தாரா).
வழக்கமான காதல் கதை போன்று தோற்றம் தந்தாலும், அதனை மீறி ஒரு மனிதனின் மனம் காலவோட்டத்தில் எப்படி மாறிப் போகிறது என்பதைச் சொன்ன விதத்தில் வேறுபடுகிறது இப்படம். வாழ்க்கை படத்தில் வரும் ‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமா’ என்ற பாடலின் உள்ளடக்கத்தை உரக்கப் பேசுகிறது. அதுவே இதன் யுஎஸ்பி.
வேறுபட்ட பார்வை!
’ஜீவி’ படத்தில் ஆக்ஷனோடு நடிப்பிலும் அசத்தியவர் வெற்றி. அதேபோன்று இதிலும் கதை நாயகனாக அவர் தோன்றியிருக்கிறார்.
நீண்ட தலைமுடி, தாடியோடு சில காட்சிகளில் வெற்றி தோன்றுவது சிரிப்பை வரவழைத்தாலும், அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர்த்திவிடுகிறது அவரது உடல்மொழி. அதேநேரத்தில், தனது நடிப்பில் மிகையுணர்ச்சியைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இன்னும் இன்னும் சிறப்பாகத் திரையில் பளிச்சிடக் கூடும்.
மலையாள நடிகை அனு சித்தாராவுக்கு எல்லா மொழிகளிலும் தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு. அவரது வயது மூப்பு துருத்தலாகத் தெரிந்தபோதும், அது கதையோடு பொருந்தி நிற்கிறது.
மதுரா, இதில் ஜெர்மனித் தாய், இந்தியத் தந்தைக்குப் பிறந்த பெண்ணாக வந்து போயிருக்கிறார். அவரது இருப்பு ‘ஈர்ப்பை’ ஏற்படுத்தும்விதமாக இருக்கிறது. முக்கியமாக, அவரது கண்களும் புன்னகையும் அவ்வளவு அழகு.
மதன் தட்சிணாமூர்த்தி, விவேக் பிரசன்னா வந்து போகும் பிளாஷ்பேக் காட்சிகள் நிறையவே மௌனத்தை அடக்கியிருக்கின்றன.
சிறு வயது தியாகு, தாமரையாக வருவோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஈர்ப்பை அதிகப்படுத்துகின்றன. ஆபாச எல்லையைத் தொட்டுவிடாதவாறு அவை கவனமுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் தவிர்த்து கருணாகரன், மு.ராமசாமி, ஹரீஷ் பேரடி உட்படப் பலர் இதிலுண்டு.
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின், அழகியல் நிறைந்த சினிமா மொழியை ஒவ்வொரு பிரேமிலும் திணிக்க முற்படவில்லை. அதனால், திரையில் இயல்பான சில மனிதர்களைக் கண்ட எண்ணமே நம்மைத் தொற்றுகிறது.
ஆங்காங்கே பிளாஷ்பேக் காட்சிகள் வந்தபோதும், மனதை வாட்டும் சில நினைவுகள் அலையடித்தபோதும், குழப்பமின்றி கதை நகர வழியமைத்து தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன்.
பிளாஷ்பேக் காட்சிகளில் நம் கவனத்தைத் தன் பக்கம் எளிதாக இழுத்துக் கொள்கிறார் கலை இயக்குனர் உதயகுமார்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இப்படத்தில் நல்ல சில மெலடிகளை தந்திருக்கிறார். ‘பீல்குட்’ படம் எனும் தொனியை அதிகப்படுத்துவதில் அவரது பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆர்.சிவா இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கிறார்.
ஆலனை பார்க்கலாமா?
ஒரு மனிதரின் வாழ்க்கை பயணத்தை வேறு கோணத்தில் அவர் நோக்கியதே, இக்கதையை உருவாக்கியிருக்கிறது. அந்த வித்தியாசமான பார்வைதான், வெறும் உடலாக இருந்திருக்க வேண்டிய ஒரு காட்சிப்படைப்புக்கு உயிர் தந்திருக்கிறது.
பதின்ம வயது வரை மகிழ்ச்சியை மட்டுமே மனதில் இருத்தியிருக்கிற ஒரு மனிதன், அதன்பின் ஒட்டுமொத்தமாகத் துன்பத்தைக் கண்டு துவண்டுபோவதுதான் இக்கதையின் ஆதார மையம்.
அதிலிருந்து அவன் மீள்வதும், மீண்டும் அதில் மூழ்குவதும் அடுத்தடுத்து நிகழ்கிறது. அதற்குள், அவன் நடுத்தர வயதை அடைகிறான். அதன்பிறகும் கூட வெறுமையை நிறைக்காமல், உலகத்தையே நேசிக்கிற மனதை அவன் பெற்றிருப்பதைக் காட்டுகிறது ‘ஆலன்’. அதற்கு, அவன் மீது கொட்டப்பட்ட காதல்களே காரணம் என்றும் சொல்கிறது.
இந்த பார்வை எல்லா மனிதர்களுக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது. தனது பார்வைக்கோணத்தை நமக்கு பகிரத் தந்திருக்கிறார் இயக்குனர் சிவா. கூடவே, அவரவர்க்குப் பிடித்தமானதைச் செய்வதே சிறந்த ஆன்மிக வழி என்றிருக்கிறார்.
முதல் அரை மணிநேரம் படம் பார்க்கையில், அந்த பார்வைக்கோணம் உங்களுக்குப் புலப்படும். அது பிடித்துப்போனால் மட்டுமே, தொடர்ந்து இருக்கையில் ஒருவரால் அமர முடியும். ஆக, ‘ஆலன்’ படத்தைக் காண்பதா, வேண்டாமா என்பதை அந்தக் கணமே முடிவு செய்கிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்குச் செல்லலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
மீண்டும் மீண்டுமா? : நியூசிலாந்திடம் பட்டத்தை பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா!
பிக் பாஸ் சீசன் 8 : அசிங்கப்பட்ட அர்னவ்… வச்சு செய்த சேதுபதி