2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் இந்திய சினிமா ரசிகர்களை தாண்டி உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மோகன்லால் ஹீரோவாக நடித்த இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கொரியன் என பல மொழிகளில் ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் படம் ரீமேக் ஆனது. இந்த படத்தில் மோகன் லால் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிக பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
சமீபத்தில் திரிஷ்யம் முதல் பாகத்தின் ஹிந்தி ரீமைக்கை தயாரித்த பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் இணைந்து அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் ஹாலிவுட் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
திரிஷ்யம் 2 படத்திற்கு பின் மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் “ராம்” என்ற படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், சில காரணத்தினால் ராம் படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை, அந்த படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு மூன்றாவது முறையாக ஜீத்து ஜோசப் மோகன்லால் கூட்டணியில் 12th மேன் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
அதனை தொடர்ந்து, 4வது முறையாக மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான “Neru” திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. 12 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ஜீத்து ஜோசப் ராம் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “லண்டனில் ராம் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய சண்டைக் காட்சியை படமாக்கும் போது படத்தில் நடிக்கும் நடிகைக்கு விபத்து நேர்ந்தது. அதன் பிறகு அங்கு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் படபிடிப்பினை தொடர முடியாத சூழ்நிலை உருவானது.
அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் படத்தில் ஒரே மாதிரியான நிலப்பரப்பில் வரும் காட்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அதே காலநிலையில் காட்சிகளை எடுத்தாக வேண்டும். இல்லை என்றால் முன்பு எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் வீணாகிவிடும்.
மேலும் மொராக்கோ, துசினியாவிலும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. மீண்டும் ராம் படத்தினை கொண்டு வர நாங்கள் கடுமையாக போராடுகிறோம். மோகன்லால், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு உள்பட பலரும் எப்படியாவது அனைத்து தடைகளையும் மீறி ராம் படத்தினை திரைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றோம்” என்று கூறினார்.
ஜீத்து ஜோசப்பின் ராம் திரைப்படத்தில் மோகன்லால் ஒரு ரா ஏஜென்ட்டாக நடிக்கிறார். இந்த படம் ஆக்சன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: `டீஹைட்ரேஷன்’… தற்காத்துக்கொள்வது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!