இசையமைப்பாளர் இளையராஜா தன் முதல் சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்திய இசையுலகில் சுமார் 50 ஆண்டுகளாக வெற்றிகரமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார்.
கடந்தாண்டு அவரது இசையமைப்பில் வெளியான விடுதலை படத்தின் பாடல்கள் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்தது.
மேலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து இசை கச்சேரிகளையும் நடத்தி தனது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபலமான சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருந்தார்.
https://twitter.com/ilaiyaraaja/status/1851953515226083389
இந்த நிலையில் தீபாவளி திருநாளான இன்று ஒரு முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதில், “அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன் என்பதையும், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கமல்ஹாசன் திரைக்கதையில், தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் சிம்பொனி இசையை வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தீபாவளி அடினா இதானோ : அப்டேட் குமாரு!
IPL Retentions : ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்கள் யார் யார்? – முழு விவரம்!