நயன்தாரா நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘அறம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார்.
அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகை ஆண்ட்ரியா கதைநாயகியாக ‘மனுஷி’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படத்தை வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. எனினும் அதன் பின்னர் அந்தப் படம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
திரையுலகம், நடிகர் நடிகைகள் பற்றி அவருடைய வெளிப்படையான பேச்சு காரணமாக அறம் படத்துக்குப் பின் பல முயற்சிகள் எடுத்தும் அவருக்கு கை கூடிவரவில்லை.
வெற்றிமாறன் மூலம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் தமிழ் சினிமாவில் உள்ள அணுகுமுறைகளுடன் அவரால் உடன்பட்டு பணியாற்ற முடியவில்லை. இதன் காரணமாக வெற்றிமாறன் மூலம் கிடைத்த ’மனுஷி’ வாய்ப்பும் முடங்கிப்போனது.
இந்நிலையில், கோபி நயினார் அறம் படத்துக்கு முன்பாக முதன்முதலாக ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தான் இயக்கிய கருப்பர் நகரம் படத்தை தூசி தட்டி வெளியில் எடுத்தார் கோபி நயினார்.
அதை மெருகேற்றி வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய் ஆதரவு கொடுத்திருக்கிறார்.
அதன் பயனாக ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜே.டி.சக்கரவர்த்தி நடித்த அந்தப் படம் புத்தம் புதிய படம் போல் சித்தரிக்கப்பட்டு, நவம்பர் 9, 2023 அன்று இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் ஆர்யா ஆகியோரைக் கொண்டு முதல்பார்வை மற்றும் முன்னோட்டம் ஆகியன வெளியிடப்பட்டன.
இந்தநிலையில் தற்போது அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கோபி நயினார் வெளியேற்றப்பட்டிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமாக சினிமா வட்டாரத்தில் கூறுகையில், படத்தை வெளியிடும் பணிகள் தொடங்கிய சில நாட்களிலேயே ஜெய் உள்ளிட்ட படக்குழுவினரோடு கோபிநயினார் முரண்பட்டுக் கொண்டார்.
பின்னர் படக்குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து கோபிநயினாரைப் படத்திலிருந்து வெளியேற்றிவிட்டு படத்தை முடிக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.
அதன் முடிவாக, திரையுலக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ’இந்தப்படத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, இனிமேல் இந்தப்பட விசயங்களில் தலையிடமாட்டேன், எக்காலத்திலும் இப்படத்துக்கு உரிமை கோரமாட்டேன்’ என்று எழுதி இயக்குநர் கோபிநயினாரிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாயகன் ஜெய் மற்றும் இசையமைப்பாளர் கே.எஸ்.பிரசாத் ஆகியோர் பொறுப்பேற்று கருப்பர் நகரம் படத்தை முடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் 2024 ஆம்ஆண்டு தொடக்கத்திலேயே கருப்பர்நகரம் படம் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாமா?
சென்னை வெள்ளம்! பாஜக கராத்தே தியாகராஜன் அட்டாக்… அமைச்சர் துரைமுருகன் ஆக்ஷன்!