இயக்குநர் அமீரை விமர்சித்து பேசியதற்குத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று (நவம்பர் 29) வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஞானவேல் ராஜா பேசிய போது அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் அமீர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வந்த நிலையில் அமீர் குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “’பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
10 வருடத்தை யார் திரும்பிக் கொடுப்பார்கள்? செல்வகணபதி தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!
ஒரே நாளில் ரூ.720 உயர்வு: 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!