அனைத்து தரப்பினருக்குமான படமா இது?!
சில நேரங்களில் ‘மொழி மாற்றுப்படம்’ என்று தெரிந்தும், திரையை விட்டு விலக மனம் யோசிக்கும். உடனிருக்கும் சகாக்கள் கிண்டலடிக்கத் தயாரானாலும், ‘நல்லாத்தானே இருக்கு’ என்று பதில் சொல்லத் தோன்றும். இதர படங்கள் உடன் இதனை ஒப்பிடுவது தேவையற்றது என்ற எண்ணத்தை விதைக்கும்.
அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி, சாய்குமார், சச்சின் கடேகர், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’.
இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது? எளிதாக இது பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறதா?
பாஸ்கர் எனும் மனிதன்!
’பணம் தான் முக்கியம்’ என்று அதுவரை கைக்கொண்டிருந்த நேர்மையை உதறிச் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிற ஒரு வங்கி ஊழியர், ஒருகட்டத்தில் ‘இனிமேல் இது வேண்டாம்’ என்று பணம் சம்பாதிக்கும் வேட்கையை நிறுத்திக்கொள்ள முனைகிறார். அவரால், அது முடிந்ததா இல்லையா என்பதைச் சொல்கிறது இப்படம்.
சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்த மனிதரின் பெயர் பாஸ்கர் (துல்கர் சல்மான்).
அப்பா, தம்பி, தங்கை மற்றும் மனைவி சுமதி (மீனாட்சி சௌத்ரி), மகன் கார்த்திக் (ரித்விக்) உடன் ஒரே வீட்டில் வாழும் அவர், ஒரு தனியார் வங்கியில் காசாளராகப் பணியாற்றுகிறார்.
குடும்ப கஷ்டங்களை எதிர்கொள்வதற்காகப் பலரிடம் கடன் வாங்கியவர், ஒருகட்டத்தில் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்.
அலுவலகத்தில் தனக்கு கிடைக்கும் பதவி உயர்வு, கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறார்.
ஆனால், பாஸ்கரின் அந்தக் கனவு சுக்குநூறாகிறது. வேறொரு நபரை கிளை மேலாளர் பொறுப்புக்கு நியமிக்கிறது நிர்வாகம்.
அந்த ஏமாற்றம் அவரை விரக்தியடைய வைக்கிறது. அதனை எதிர்த்துக் கேள்வி கேட்க வைக்கிறது.
பதிலுக்கு, கிளை மேலாளர் பாஸ்கர் மீது குற்றம் சுமத்தும் விதமாகப் பேசுகிறார். அந்த நொடி, அவரது வாழ்வே தலைகீழாகிறது.
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பாஸ்கர், எல்லோரிடமும் வழக்கம்போலப் பேசுகிறார், நடந்து கொள்கிறார். புயலுக்கு முன்பிருக்கும் அமைதி அது என்று உடனிருப்பவர்களுக்குத் தெரியாமல் போகிறது. அதுவரை நியாயமான வழியில் வாழ்ந்து வந்த பாஸ்கர், மெல்லத் தடம் புரளத் தொடங்குகிறார்.
ஆண்டனி (ராம்கி) என்பவர் சட்டவிரோதமாகச் சில வெளிநாட்டுப் பொருட்களைச் சுங்க வரித்துறையினரிடம் இருந்து பெற்று வந்து சிலரிடம் விற்பனை செய்ய, சில லட்சம் ரூபாய் வங்கிக் கடனாக வேண்டுமென்று பாஸ்கரிடம் கேட்கிறார். அவருக்கு உதவ மறுக்கும் பாஸ்கர், ஒருகட்டத்தில் வங்கிப்பணத்தை அவருக்குக் கொடுத்து உதவுகிறார்.
ஆண்டனி வெளிநாடு சென்ற பிறகு, தான் செய்த மோசடிகளை நிறுத்திக்கொள்ள எண்ணுகிறார் பாஸ்கர். ஆனால், வங்கி நிர்வாகத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் சிலர் அவரை மீண்டும் அப்படியொரு சூழலுக்குத் தள்ளுகின்றனர்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கார், வீடு, நகை, பணம் என்று பலவாறாகச் சம்பாதிக்கிறார். இறுதியில், பாஸ்கர் மிகப்பெரிய மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்தப் படம், பாஸ்கர் என்ற தனிமனிதரைப் பற்றியது. அவரைப் பற்றிய தெளிவான சித்திரம் முதல் 20 நிமிடங்களில் நமக்குத் தெரிந்துவிடுகிறது. பிறகு, அவர் மோசடி செய்து எப்படிக் கோடி கோடியாகப் பணம் சம்பாதித்தார் என்று சொல்கிறது இதன் மீதி.
’கிளாசிக்’ படங்களின் சாயல்!
தொண்ணூறுகளில் நிகழ்வதாக, ‘லக்கி பாஸ்கர்’ கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தாவை நினைவூட்டும்விதமாகச் சில காட்சிகளைத் தந்திருக்கிறார்.
வங்கியில் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களைத் திரையில் காண்பித்திருப்பதோடு, தொண்ணூறுகளில் கணினிமயமாக்கம் நிகழ்வதற்கு முன்பாக வங்கிகளில் ஊழல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்வதாக அமைந்திருக்கிறது இப்படம்.
லியோனர்டோ டிகாப்ரியோ நடித்த ‘கேட்ச் மீ இஃப் யூ கேன்’, அக்ஷய் குமாரின் ‘ஸ்பெஷல் 26’ உட்படச் சில படங்களை நினைவூட்டுகிறது இதன் திரைக்கதை. ‘மங்காத்தா’வின் சாயலைக் கூடச் சிலர் உணரலாம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கும் வெங்கி அட்லூரி, படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களை ஒரு நாயகனாக உணரும் வகையில் நாயக பாத்திரத்தை வடித்திருக்கிறார்.
தங்கையின் திருமணத்தை முன்னிட்டு நாயகன் தனது குடும்பத்துடன் ஒரு நகைக்கடைக்குச் செல்வதாக ஒரு காட்சி இதிலுள்ளது. நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று தங்கள் மீது அங்கிருப்பவர்கள் அலட்சியத்தைக் கொட்டுவதைக் கண்டு கொதிக்கும் நாயகன், அதன்பின் என்ன செய்கிறார் என்பதாக அது நீளும்.
குடும்பத்தோடு தியேட்டருக்கு செல்பவர்கள் குழந்தைகளின் கூச்சலையும் கும்மாளத்தையும் கண்டு புன்னகைப்பது வழக்கமாக நிகழ்வது. மேற்சொன்ன காட்சிக்கு, படம் பார்க்க வந்த தந்தையோ, தாயோ உணர்வெழுச்சி அடைவதைக் குழந்தைகள் பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்கள் இதில் நிறைய உண்டு. உறவு மட்டுமல்லாமல் நட்பை, நன்றியைச் சிலாகிக்கிற காட்சிகளும் இதிலிருக்கின்றன.
இப்படத்தின் திரைக்கதையாக்கத்தில் சில குறைகள் தென்படுகின்றன.
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பதாகக் காட்டிய கதையில் கம்ப்யூட்டர் பயன்பாடு பரவலாக இருப்பது போன்று சித்தரித்திருப்பது மிக முக்கியமான குறை.
இன்னொன்று, தனது வாழ்வை நாயகன் விவரிப்பதாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை உத்தி.
எதையெல்லாம் நாயகன் கதாபாத்திரங்களிடம் பேசுகிறார், எதனை நம்மிடம் சொல்கிறார் என்ற குழப்பத்தை அது ஏற்படுத்துகிறது. அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.
அது போன்ற லாஜிக் மீறல்களைத் தாண்டிவிட்டால், நல்லதொரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தியை நிச்சயம் ‘லக்கி பாஸ்கர்’ தரும்.
அதற்கேற்ப நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, டிஐ நுட்பத்துடன் இணைந்து ‘கிளாசிக்’ காட்சியாக்கத்தைத் தர முயற்சித்திருக்கிறது.
தொண்ணூறுகளில் கதை நிகழ்வதாகக் காட்ட, இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் செட்டில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி மும்பை நகரத்தில் மிகச்சில பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய உதவியிருக்கிறார் கலை இயக்குனர் பங்லான்.
நவின் நூலியின் படத்தொகுப்பு ரொம்பவே கூர்மையாக காட்சிகளை கத்தரித்திருப்பதோடு, கதை சொல்லலில் குறை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கொல்லாதே’, ‘லக்கி பாஸ்கர்’ பாடல்கள் சட்டென்று நம்மை ஈர்க்கின்றன. போலவே, பல காட்சிகளை அழுத்தம் திருத்தமாகத் திரையில் தென்படச் செய்திருக்கிறது பின்னணி இசை.
துல்கர் சல்மான் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இடம்பெற்றிருக்கிறார். ‘ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கணுமா’ என்று சொல்லி, வெங்கியிடம் எத்தனை தெலுங்கு ஹீரோக்கள் இந்தப் படத்திற்கு ‘நோ’ சொல்லியிருப்பார்கள் என்று தெரியாது. அப்படிச் சொல்லியிருந்தால், அவர்கள் ரூம் போட்டு அழுவது நிச்சயம்.
வழக்கமான தெலுங்குப் பட நாயகனாகத் தோன்றாமல், ஒரு சாதாரண மனிதனாகத் திரையில் தோன்றியிருக்கிறார் துல்கர். ஆனால், அதுவே படத்தில் சில காட்சிகளில் அவரது ஹீரோயிசம் வெளிப்பட உதவியிருக்கிறது.
நாயகி மீனாட்சி சௌத்ரி இதில் அதிகக் காட்சிகளில் இடம்பெறவில்லை. ஆனால், இந்தக் கதையில் நாயகனுக்கு அடுத்தபடியாக அவரே நம் நெஞ்சில் நிறைகிறார். இயக்குனர் அவரை அதிகம் வசனம் பேச விடாமல், பெரிதாக உணர்வெழுச்சி அடைவதைக் காட்டாமல், சரியான அளவில் பயன்படுத்தியிருக்கிறார்.
ராம்கிக்கு இதில் குறிப்பிடத்தக்க காட்சிகள் இருக்கின்றன. ஆனால், பின்பாதியில் அவர் இடம்பெறாதது ஒரு குறை. இப்படத்தைப் பார்க்கும் 90’ஸ் கிட்ஸ், அந்த ஏமாற்றத்தை நிச்சயம் எதிர்கொள்வார்கள்.
மாஸ்டர் ரித்விக் வரும் காட்சிகளில், அவருக்குத் தனி முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இன்னும் சாய்குமார், சச்சின் கடேகர், டினு ஆனந்த், சுதா உட்படப் பலர் இதில் இருக்கின்றனர். அவர்களது முகங்கள் நமக்குள் பதிவாகின்றன என்பதிலிருந்தே அப்பாத்திரங்களின் முக்கியத்துவம் புரியும்.
வங்கி, பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் இப்படத்தைப் பார்க்கும் சிலருக்குப் புரியாமல் போகலாம். ஆனாலும், நாயகன் முறைகேடாகப் பணம் சம்பாதிப்பதும், அந்தப் பணம் பறிபோகும் சூழல் ஏற்படுவதும் எளிதாகப் புரியும்.
தெலுங்கு டப்பிங் படம் இது, தெரிந்த நடிகர் நடிகைகள் இல்லை, காரசாரமான மசாலா படமாக இருந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துகளைப் படம் பார்ப்பதற்கு முன்பே சொல்பவர்கள் இப்படத்தைத் தவிர்ப்பார்கள்.
மற்றவர்களுக்கு இப்படம் ‘ஒருமுறை பார்க்கலாம்’ ரகமாகத் தெரியக்கூடும். அவ்வாறு நோக்கினால், ‘லக்கி பாஸ்கர்’ அனைத்து தரப்பினருக்குமான படம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் பீஸ்… பண மழையில் ஐ.பி.எல் வீரர்கள்… சென்னை அணியில் யார் யார்?