கருடன் படத்தில் சூரியின் உழைப்பு அசாதாரணமானது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வலார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கே.குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த படம் கருடன். மே 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை அறிவிக்கும் வகையில் நேற்று (ஜூன் 15) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது கருடன் படக்குழு.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,
”இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம்.
டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் கருடனும் ஒன்று.
திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்கத்தின் வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் கருடன்.
டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனையை போனசாக வைத்துக் கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம் கருடன்.
இந்த வகையிலான வணிகம் தான் ஜனநாயகம் மிக்கது என உணர்கிறேன். ஏனெனில் டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக படத்தை உருவாக்கும் போது அவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அதைதான் அவர்கள் வாங்குவார்கள்.
அவர்களுக்கு தேவையானதை எவ்வளவு விலை கொடுத்தும்வாங்குவார்கள். தேவையில்லை என்றால் அதனை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும்.
ஒரு படைப்பாளியாக … ஒரு தயாரிப்பாளராக… திரையரங்குகளில் வெளியிட்டு, நேரடியாக மக்களிடம் கொண்டு செல்கிற போது படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இது டிஜிட்டல் தளங்களில் இல்லை.
இந்தப் படத்தில் சசிகுமார் இணைந்தது முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. படத்தை பார்த்த பிறகு சசிக்குமாருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவர் தனித்துவமான நடிப்பை வழங்கி இருக்கிறார் என உணர்ந்தேன்.
சூரியின் உழைப்பு அசாதாரணமானது. விடுதலை படப்பிடிப்பின் போது அவருக்கு வலது தோள்பட்டை அருகே காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் இந்தப் படத்தில் நடித்தார். காயத்தை மேலும் மோசமாக்கி கொண்டார். இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக நூறு சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறார்.
அவர் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை ஆச்சரியப்படுத்துவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர் நடிகர் சூரி. காட்சியை படமாக்கும் போது கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கிக் கொண்டு நடிக்க முயற்சிக்காமல்..
கதாபாத்திரமாகவே இருக்க முயற்சி செய்பவர் சூரி. இதனை சூரி தொடர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டால்… இன்னும் சிறப்பான நடிகராக .. கூடுதல் உயரத்திற்கு செல்வார். ” என்றார்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : மதுரை எய்ம்ஸ்-ல் பணி!
டாப் 10 செய்திகள்: திமுக முப்பெரும் விழா முதல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வரை!