சரத்குமார் திரைவாழ்வில் திருப்புமுனை தந்த ‘சேரன் பாண்டியன்’!

Published On:

| By Kavi

'Cheran Pandian' gave a breakthrough in Sarathkumar's film career!

ரஜினிகாந்த், சத்யராஜ் பாணியில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறிய நடிகர்களின் வரிசையில் சரத்குமாருக்கும் ஒரு இடமுண்டு.

அதே பாதையில் பயணித்து நாயகனாக வெற்றி பெற முடியாதவர்களைப் பட்டியலிட்டால், மேற்சொன்னவர்களின் முக்கியத்துவம் விளங்கும். இடையிடையே திரை வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, இன்றும் தனது பங்களிப்பைத் தந்து வருபவர் சரத்குமார்.

அப்படிப்பட்டவருக்கு நாயக அந்தஸ்து தரலாம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஊட்டிய படம் ‘சேரன் பாண்டியன்’. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படமானது 1991, மே 31ஆம் தேதியன்று வெளியானது.

ஓராண்டுக்கு முன் சூப்பர்குட் பிலிம்ஸின் யூடியூப் சேனலில் ‘சேரன் பாண்டியன்’ ஹெச்டி தரத்தில் வெளியானது. தற்போதுவரை இதனைச் சுமார் 48 லட்சம் பேர் கண்டு ரசித்திருக்கின்றனர். ‘போர்தொழில்’ படத்தில் சரத்குமாரை ரசித்தவர்கள், 33 ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரது படமொன்றை ரசிக்கவும் தயாராக இருக்கின்றனர் என்பது அப்படத்திற்குக் கிடைத்த பெருமை.

அக்னி நட்சத்திரம் கனெக்‌ஷன்!

‘அக்னி நட்சத்திரம்’ பாணியில் மோதிக்கொள்ளும் இரண்டு சகோதரர்களின் கதையே ‘சேரன் பாண்டியன்’. முன்னதைப் போலவே, இதிலும் ஒரு தந்தை, இரு தாய்கள் என்பதே அதற்குக் காரணமாக இருக்கிறது.

அக்னி நட்சத்திரத்தில் கார்த்திக் தங்கையாக தாரா வருவார் என்றால், இதில் சரத்குமார் தங்கையாக சித்ரா நடித்திருப்பார். அந்த படத்தில் கார்த்திக், பிரபுவின் தந்தையாக விஜயகுமாரும் தாயாராக சுமித்ராவும் ஜெயசித்ராவும் நடித்திருப்பார்கள்.

‘சேரன் பாண்டியன்’ படத்தில் அந்த சகோதரர்களில் ஒருவரை வயதானவராகவும், இன்னொருவரை இளமையானவராகவும் வடித்திருந்தனர் ஈரோடு சௌந்தர் – கே.எஸ்.ரவிக்குமார் இணை.

முன்னது நகரத்துப் பின்னணியில் அமைந்தது என்றால், இப்படம் கோவை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்து வாழ்வைக் காட்டியது.

அதற்காக, ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் தழுவல் இது என்று சொல்லிவிடக் கூடாது. அதில் இருந்து கிடைத்த பொறியின் மூலமாக ஒரு கதையாகவும் இது இருக்கக் கூடும். அது சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் மட்டுமே நமக்குத் தெரியவரும்.

சேரன் (விஜயகுமார்) மற்றும் பாண்டியன் (சரத்குமார்) இருவரும் சகோதர்கள் என்றபோதும், இரு வீட்டாருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. காரணம், பாண்டியனின் தாய் வேறொரு சாதியைச் சேர்ந்தவர் என்பதே. அதுவே, பாண்டியன் தங்கை பரிமளத்திற்குத் திருமணமாவதையும் தள்ளிப்போடுகிறது.

இந்தச் சூழ்நிலையில், பாண்டியனின் தாய்மாமன் மகன் சந்திரன் (ஆனந்த்பாபு) அந்த ஊருக்கு வருகிறார். தனது பெற்றோரை இழந்ததாகச் சொல்லும் அவர், அங்கேயே தங்குகிறார். சேரனின் மகள் வெண்ணிலாவைச் (ஸ்ரீஜா) சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் தீ பற்றுகிறது.

சாதி வேற்றுமை பாராட்டும் சேரனுக்கு சந்திரன் – வெண்ணிலா காதல் விவகாரம் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது? ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா? அவர்களது காதலைச் சேர்க்க பாண்டியன் உதவினாரா என்று சொல்லும் இப்படத்தின் மீதி.

ஹிட்டுக்கு காரணம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இரண்டாவது படமான ‘சேரன் பாண்டியன்’ பல தியேட்டர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு வெள்ளிவிழா படமாகவும் அமைந்தது.

சௌந்தர்யன் இசையில் வெளியான பாடல்கள் இப்படத்தின் துருப்புச்சீட்டு என்றும் சொல்லலாம். ‘காதல் கடிதம்’, ’கண்கள் ஒன்றாக’, ‘வா வா எந்தன்’ போன்ற காதல் பாடல்கள் மட்டுமல்லாமல் ‘சம்பா நாத்து’, ‘கொடியும் தோரணமும்’, ‘சின்னத்தங்கம் என் செல்லத்தங்கம்’ போன்ற பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

காட்சிகளில் பாத்திரங்களின் உணர்வுகளுக்கும் உடல்மொழிக்கும் மதிப்பளிக்கும் விதமாக அமைந்தது அசோக்ராஜனின் ஒளிப்பதிவு. அதேநேரத்தில் காதல் பாடல்களில் நாயகன், நாயகியைக் கவர்ச்சிகரமாகக் காட்டியது.

தணிகாசலத்தின் படத்தொகுப்பு இப்படத்தின் பெரும்பலம். எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் இருந்த காட்சிகளை, அதே வேகத்துடன் திரையில் தொகுத்திருந்தார். ஆனந்த்பாபு – ஸ்ரீஜா ஜோடிக்கு படத்தில் முக்கியத்துவம் உண்டு.

இருந்தபோதிலும் விஜயகுமார், மஞ்சுளா, சரத்குமார், சித்ராவோடு ஒரு பாத்திரமாக வந்து போன கதாசிரியர் ஈரோடு சௌந்தருக்கும் கூட திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கும். அந்த பாத்திர வார்ப்பே இப்படத்தை ரசிகர்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

அது மட்டுமல்லாமல், கோவை வட்டார வழக்கைக் கொண்டிருந்த வசனங்களும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன. கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. ‘க்ரீஸ் டப்பாவ எப்படி எட்டி உதைச்ச’ என்பது அதற்கான ஒரு சோறு பதம்.

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்திருந்த ‘சேரன் பாண்டியன்’ படம் இப்போதும் ரசிக்கும்விதமாக உள்ளது என்பதே உண்மை. குறிப்பிட்ட சாதிப்பெயரைச் சொல்வதும் அதன் பெருமைகளை உரக்கப் பேசுவதும், இன்றைய சூழலில் கொஞ்சம் பின்னடைவாகத் தெரியலாம். அதனைக் கடந்து சென்றால், இப்படம் நல்லதொரு பொழுதுபோக்கு படமாகத் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.

நாயகன் ஆன சரத்குமார்!

‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தில் ஆன்ட்டி – ஹீரோவாக நடித்த கார்த்திக்கைத் துரத்தும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார். அந்த படத்தைத் தயாரித்ததும் அவரே. தொடர்ந்து ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற பேண்டஸி படத்தையும் தயாரித்தார்.

இடையே வில்லனின் அடியாள், வில்லன், குணசித்திர பாத்திரங்கள் என்று பல படங்களில் இடம்பிடித்தார். புலன் விசாரணை, ஜகதலபிரதாபன், சீதா, மௌனம் சம்மதம், வேலை கிடைச்சிடுச்சு, புரியாத புதிர், ராஜா கைய வச்சா போன்ற படங்களைப் பட்டியலிட்டால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒருகட்டத்தில் ‘சித்திரைப்பூக்கள்’, ’கேப்டன் பிரபாகரன்’, ‘இதய வாசல்’, ‘காவல் நிலையம்’ போன்ற படங்களில் இரண்டாவது நாயகனாகவும், பின்னர் இரண்டு நாயகர்களில் ஒருவராகவும் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படிப்பட்ட சரத்குமாரை ‘சோலோ’ ஹீரோவாகவும் நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர்களுக்கு நம்பிக்கை தந்த படம் ‘சேரன் பாண்டியன்’. ரசிகர்களின் வரவேற்பு அதனைத் தூண்டியது. இதில் நகைச்சுவை, சென்டிமெண்ட் மட்டுமல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவரது பங்களிப்பு அபாரமாக இருந்ததே அதற்குக் காரணம்.

அதன் தொடர்ச்சியாக, 1992இல் மட்டும் 11 படங்களில் நடித்தார் சரத்குமார். கௌரவ வேடத்தில் ஒரு படத்தில் தலைகாட்டிய அவர், மற்ற படங்களில் தனி நாயகனாகத் தோன்றியிருந்தார். அவற்றில் ‘பெரியகவுண்டர் பொண்ணு’, ‘சூரியன்’, ‘ஊர் மரியாதை’, ‘சாமுண்டி’ போன்றவை மாபெரும் வெற்றிகளாக அமைந்தன.

பிறகு ‘நாட்டாமை’, ‘சூரிய வம்சம்’, ’கட்டபொம்மன்’, ‘கேப்டன்’, ’மகாபிரபு’, ’மாயி’, ‘நட்புக்காக’ என்று பல சூப்பர்ஹிட்களை சரத்குமார் தந்தது நாமறிந்தது.

‘போர்தொழில்’, ‘பரம்பொருள்’, ‘பொன்னியின் செல்வன்’ மூலமாக இன்றுவரை தனது ராஜபாட்டையை அவர் தொடர்ந்து வருகிறார்.

சரத்குமாருக்கு நாயக அந்தஸ்து கிடைக்கச் செய்த ‘சேரன் பாண்டியன்’ படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share