’வசூல் No 1’ : உலகளவில் புதிய சாதனை படைத்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

Published On:

| By christopher

Manjummel Boys set a new record

Manjummel Boys: ‘2018’ படத்தின் வசூலை முறியடித்து, உலகளவில் அதிக வசூல் செய்த மலையாள திரைப்படம் என்ற புதிய சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது.

மலையாளத்தில் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

கடந்த 2006ஆம் ஆண்டு கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நண்பர்கள் கேங், அங்குள்ள குணா குகைக்கு சென்றபோது, அங்குள்ள ‘சாத்தானின் சமையலறை’ என்ற பள்ளத்தில் அந்த கேங்கின் ஒருவர் சிக்கிக்கொள்ள, அவரது நண்பர்கள் எவ்வாறு போராடி மீட்டார்கள் என்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாரானது.

இந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில், சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், பிரபல மலையாள நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் என பல இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கேரளாவில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படம், கமல்ஹாசனின் ‘குணா’ படத்துடன் கொண்ட தொடர்பால், தமிழ்நாட்டிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுக்க, தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்தது.

அதை தொடர்ந்து, மிக விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டிய இப்படம் ஒவ்வொரு நாளும் மலையாள திரையுலக வசூலில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து வருகிறது.

மலையாள சினிமாவில் அதிக வசூல்!

இந்நிலையில், டோவினோ தாமஸ் நடித்த ‘2018’ படத்தின் வசூலை முறியடித்து, உலகளவில் அதிக வசூல் செய்த மலையாள திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது இந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

முன்னதாக, ரூ.175.50 கோடி வசூலுடன் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் பட்டியலில் ‘2018’ முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அப்படத்தை 2வது இடத்திற்கு தள்ளி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ.176 கோடி வசூலுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் இன்னும் வெற்றிகரமாக திரையாகிவரும் நிலையில், இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை எட்டி புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் மோகன் லால் நடித்த ‘புலி முருகன்’ ரூ.152 கோடி வசூலுடன் 3வது இடத்திலும், ரூ.127 கோடி வசூலுடன் அதே மோகன் லால் நடித்த ‘லூசிபர்’ 4வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலில், அண்மையில் மலையாளம், தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிரேமலு’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து 5வது இடத்தில் உள்ளது. இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு, இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படமும் மேலும் சில கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

WPL 2024 : இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதப்போவது யார்?

ஆபாச வெப் சீரிஸ்கள்: மத்திய அரசு முடக்கிய 18 ஓடிடி தளங்கள் எவை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share