விமர்சனம் : பேட் பாய்ஸ் – ரைடு ஆர் டை!

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

’பேட் பாய்ஸ்’ ரசிகர்களுக்கு மட்டுமே..!

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் அடுத்தடுத்த பாகங்களைப் பார்க்க எப்போதும் ரசிகர்கள் தயாராக இருப்பார்கள். மேற்கத்திய நாடுகளில் அது ரொம்பவே சகஜம்.

நம்மூரில் அந்த வழக்கம் இப்போதுதான் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்குப் பூர்த்தி செய்தாலே போதும்; அதன் பாகங்கள் தொடர்ந்து வெற்றிகளை வாரிக் குவிக்கும். அதன்பிறகு, அந்த படத்தின் டைட்டில் ஒரு பிராண்ட் ஆக மாறிவிடும். அந்த வரிசையில் இடம்பெறும் படங்களில் ஒன்று ‘பேட் பாய்ஸ்’.

வில் ஸ்மித், மார்ட்டின் லாரன்ஸ் நடித்த இப்படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. 2020இல் மூன்றாம் பாகமான ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ திரைப்படம் 90 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாராகி, உலகெங்கும் 425 மில்லியன் டாலரை அள்ளியது. இப்போது நான்காம் பாகமான ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ வெளியாகியிருக்கிறது.

இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது.

ஐம்பதுகளில் நாயகர்கள்!

டிடெக்டிவ் மைக் லோரியும் (வில் ஸ்மித்) மார்கஸ் பர்னெட்டும் (மார்ட்டின் லாரன்ஸ்) சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைபிரியாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தெரபிஸ்ட் கிறிஸ்டினை மைக் திருமணம் செய்கிறார். அதில் மார்கஸ் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார்.

அந்த விழாவின் நடனமாடும்போது மார்கஸுக்கு மாரடைப்பு வருகிறது. அவர் செத்துப் பிழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்கிறார்.

அந்த நேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தங்களது மேலதிகாரி கேப்டன் கான்ராட் ஹோவர்டைச் சந்திப்பது போல மனதுக்குள் உணர்கிறார். அப்போது, ’நீ சாகும் தருணம் இன்னும் வரவில்லை’ என்கிறார் கான்ராட்.
கூடவே, ’நீயும் மைக்கும் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று கான்ராட் சொல்ல, அடுத்த நொடியே உயிர்த்தெழுகிறார் மார்கஸ். அதுவரை அவரைத் தொற்றியிருந்த பயங்கள் அந்த நொடியில் மாயமாகியிருக்கின்றன. மைக்கினால் கூட அதனை நம்ப முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கான்ராட்டுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பது போன்று பொய்யாகச் சில சான்றுகளைத் தயார் செய்கின்றனர் சில நபர்கள். ஊடகங்களில் அந்த தகவல் வெளியாகும்போது மைக்கும் மார்கஸும் அதிர்ச்சியடைகின்றனர். ’கான்ராட் நிச்சயமாகத் தவறு செய்பவர் அல்ல’ என்கின்றனர்.

கான்ராட் வங்கிக்கணக்குக்கு ஒருவர் பணம் அனுப்பியிருப்பதாகப் பதிவாகியிருக்கிறது. ஆனால், அந்த நபரும் அவரது காதலியும் இரண்டு வாரங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகவல்களை உறுதி செய்யும் போலீசாரால், கான்ராட்டுக்கு ஆதரவாக எதுவும் செய்ய இயலவில்லை.
அனைத்தையும் ஆராயும் மைக், கான்ராட் பெயரைச் சிதைக்கும் வகையில் ஏதோ ஒரு கும்பல் செயல்படுவதாக உணர்கிறார். அதனைத் தேடி, நண்பன் மார்கஸ் உடன் பயணிக்கிறார்.

அப்போது நிகழும் ஆபத்துகளில் இருந்து, இருவரும் தப்பினார்களா? வழக்கம்போல அபாரமான சாகசங்களை ‘ஜஸ்ட் லைக் தட்’ செய்தார்களா என்று சொல்கிறது ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ படத்தின் மீதி.

சத்தம் குறைவுதான்..!

’பேட் பாய்ஸ்’ படங்களின் சிறப்பே நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் காட்சிகள் தான். அதற்கேற்ப வில் ஸ்மித்தின் மைக் பாத்திரமும், மார்ட்டின் லாரன்ஸின் மார்கஸ் பாத்திரமும் நேரெதிராகப் பேசுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் அந்த விஷயம் ‘சுமாராகவே’ கையாளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆக்‌ஷன் காட்சிகளிலும் கூட சத்தம் குறைவாகவே உள்ளது. அதனால், இந்த நான்காம் பாகம் ரொம்பவே சுமார் ரகத்தில் சேர்கிறது.
கான்ராட்டை கெட்டவராகச் சித்தரிக்க வில்லன் கும்பல் ஏன் முயல்கிறது என்பதை இன்னும் விலாவாரியாகக் காட்டியிருக்கலாம். அந்த கும்பலின் தற்போதைய செயல்பாட்டையும் இதில் சொல்லாமல் விட்டிருக்கின்றனர் இயக்குனர் இணையான அடில் & பிலால்.

வழக்கமாக, ஆங்கிலப் படங்களில் இடைவேளைப் பகுதியில் வரும் சண்டைக்காட்சியும் கிளைமேக்ஸ் காட்சியும் பிரமாண்டமான காட்சியனுபவத்தைத் தரும். இதில் அது மிஸ்ஸிங். அதுவே இப்படத்தை ‘பி’ கிரேடு ஆக்‌ஷன் படமாக உணரச் செய்கிறது. படத்தின் மாபெரும் பலவீனமாகவும் அதுவே விளங்குகிறது.
அதேநேரத்தில், இந்த ‘பேட் பாய்ஸ்’ கான்செப்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வகையில் மார்கஸின் உறவினராக அர்மாண்டோ (ஜேக்கப் சிபோ) எனும் பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது இந்த பாகம். இனிமேல், அப்பாத்திரத்தைக் கொண்டு அடுத்தடுத்த பாகங்கள் தயாராகலாம்.

இதில் மையப் பாத்திரங்கள் தவிர்த்து வனிசா ஹட்ஜென்ஸ், அலெக்சாண்டர் லுட்விக், பவுல நுனெஸ், எரிக் டேன், டிஜே காலித், ஜோ பாண்டோலியானோ உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராப்ரெச் ஹேவர்ட். ஆசஃப் ஐசன்பெர்க் – டேன் லெபண்டால் இணையின் படத்தொகுப்பு ஒரு முழுமையான கதையை நாம் உணர உதவி செய்யவில்லை.

லார்ன் பால்ஃபின் இசை ஆங்காங்கே குதூகலப்படுத்தினாலும், நம்மை இருக்கை நுனியில் அமரச் செய்யும் வித்தையைக் காட்டவில்லை.

எழுத்தாக்கத்தை மேற்கொண்டிருக்கும் கிறிஸ் ப்ரெம்னர் – வில் பியல் இணையே இப்படத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்குமான முதல் ‘கிரெடிட்’டை எடுத்துக்கொள்ளும்.
கோமா நிலையில் மனித மனத்தின் செயல்பாடு, மரணத்திற்கு அப்பால் கிடைக்கும் அனுபவம் என்று ஆசியப் படங்களில் எடுத்தாளப்படும் விஷயங்களைக் கொண்டு கதையைப் பின்னியிருந்தாலும், அது முழுமையானதாக அமையவில்லை. அதனால் திரைக்கதை பலவீனமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அடில் & பிலால் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ படத்தை ‘டைம்பாஸ்’ ரகத்தில் சேர்க்கலாம்; ஒருமுறை பார்க்கலாம். ஆனால், முந்தைய ’பேட் பாய்ஸ்’ பாகங்களைப் பார்த்தால் இப்படம் ரொம்ப சுமார் ஆகத்தான் தெரியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் இப்படம் தீவிர ‘பேட் பாய்ஸ்’ ரசிகர்களுக்கானது என்றும் சொல்லலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel