அர்ஜுன் 40: தொடங்கி வைத்த ‘நன்றி’!

Published On:

| By Kavi

தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி திரைப்படங்களில் சுற்றிச் சுழன்று நடித்தவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதும், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதும் கடினம் என்ற சூழலில், அதனை வெற்றிகரமாகக் கையாண்ட நட்சத்திரங்களில் முதன்மையானவர் என்று நடிகர் அர்ஜுனைச் சொல்லலாம்.

அதில் உள்ள சாதகங்களை மட்டுமல்லாமல், பாதகங்களையும் தாண்டி வந்த அனுபவம் அவருக்குண்டு. அதுவே, இன்றும் அவரை உயிர்ப்போடு இயங்கச் செய்கிறது. அப்படிப்பட்ட அர்ஜுன், தமிழ் திரையுலகில் நுழைந்து 39 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆமாம்! ராம.நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘நன்றி’ திரைப்படம், 1984ஆம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது. அந்த வகையில், தனது தமிழ் திரைப்பயணத்தில் 40ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அர்ஜுன்.

Action King Arjun 40

தொடக்க கால வெற்றிகள்!

அர்ஜுனின் தந்தை சக்தி பிரசாத், கன்னடத் திரைப்படங்களில் நடிகராகவும் ஸ்டண்ட் கலைஞராகவும் திகழ்ந்தவர். இளம் வயதில் அவரது சகோதரர் கிஷோர், திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அதேநேரத்தில், ‘எண்டர் தி ட்ராகன்’ படம் பார்த்து ப்ரூஸ் லீயின் ‘தீவிர’ ரசிகராகத் திகழ்ந்தார் அர்ஜுன். அப்படித்தான், அவருக்கு கராத்தே மீது மோகம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்தக் கலையைக் கற்றார். அதன் விளைவாக, கட்டுக்கோப்பான உடல்வாகையும் பெற்றார். அது, சினிமாவில் அறிமுகமானபோது ‘ஆக்‌ஷன் நாயகன்’ ஆக மக்கள் ஏற்றுக்கொள்ளத் துணை நின்றது.

1981ஆம் ஆண்டு ராஜேந்திரபாபு இயக்கிய கன்னடப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் அர்ஜுன். அதன்பிறகும், அது போன்ற பாத்திரங்களே அவரைத் தேடி வந்தன. அந்த காலகட்டத்தில், ‘நன்றி’ படத்தின் வழியே தமிழில் அடியெடுத்து வைத்தார் அர்ஜுன். அதில், அவரது ஜோடியாக நளினி தோன்றினார். அவர்கள் தவிர்த்து, கார்த்திக் – மகாலட்சுமி ஜோடியும் படத்தில் உண்டு. ‘டபுள் ஹீரோ’ கதையைக் கொண்ட இப்படத்தில், வில்லன்களைப் பழி வாங்குபவராக அர்ஜுன் நடித்திருந்தார்.

அவருக்கென்று தனியாகச் சண்டைக்காட்சிகளும் அமைக்கப்பட்டன. ஏவிஎம் ராஜன் – புஷ்பலதா தம்பதி தயாரித்த ‘நன்றி’ படத்தின் வெற்றி, தொடர்ந்து பல வாய்ப்புகளை அர்ஜுனுக்கு தந்தது.  அவையனைத்தும் இரண்டு நாயர்களில் ஒருவராக, காமெடியும் ஆக்‌ஷனும் நிரம்பியதாக, முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக இருந்தன. அவற்றில் கணிசமானவை ராம.நாராயணன் இயக்கியவை.

கடமை, இளமை, வேஷம், அவன் என்று தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்தார் அர்ஜுன். அந்த வரிசையில், கலைப்புலி எஸ். தாணு முதன்முறையாகத் தயாரித்த ‘யார்’ திரைப்படம், பரவலான அறிமுகத்தைத் தமிழ் ரசிகர்களிடையே தந்தது. அதே நேரத்தில், தெலுங்கிலும் அவரது படங்கள் வெற்றியைப் பெற்றன. இதன் காரணமாக, தொடர்ச்சியாகத் தமிழில் சில படங்கள், தெலுங்கில் சில படங்கள் என்று நடித்துக் கொண்டே இருந்தார் அர்ஜுன்.

இடைப்பட்ட காலத்தில் ஓரிரு கன்னடப் படங்களில் தலைகாட்டினார். இதனால், அவர் நடித்த முந்தைய படத்தின் வெற்றியைப் பொறுத்தே அடுத்தடுத்த படங்களுக்கான சந்தை அமைந்தது. தனது தனித்துவத்தை நிரூபிக்கும் வாய்ப்பினை அவரால் பற்றவே முடியவில்லை. அதனைப் புரிந்து கொள்வதற்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார்.

Action King Arjun 40

1987இல் வெளியான ‘சங்கர் குரு’ திரைப்படம், தமிழிலும் தெலுங்கிலும் அர்ஜுனுக்கு ‘ஆக்‌ஷன் ஹீரோ’ நாற்காலியைப் பெற்றுத் தந்தது. அதன் பலனாக, சண்டைக்காட்சிகளில் மெனக்கெட்டு நடிப்பார் எனும் பெயரைப் பெற்றார்.  என்னதான் நகைச்சுவை, குடும்பச் சித்திரங்களில் நடித்தாலும், அர்ஜுனுக்கு சண்டைக்காட்சி உண்டா என்றே மக்கள் எதிர்பார்த்தனர். அந்த காலகட்டத்தில், விஜயகாந்த் போன்று ஒரு சில நாயகர்களுக்கே அப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்து வந்தது. அதனைத் தக்க வைக்க அர்ஜுன் மேற்கொண்ட முயற்சிகளே, அவருக்கு ‘ஆக்‌ஷன் கிங்’ எனும் அடைமொழியைச் சூட்டக் காரணமானது. 2011இல் ‘மங்காத்தா’ வெளியானபோது, படத்தின் வசனங்களிலும் அது தவிர்க்கமுடியாததாக இடம்பெற்றிருந்தது.

சோதனையில் சாதனை!

1990ஆம் ஆண்டு அர்ஜுனின் வாழ்வில் கடுமையான சோதனைக் காலம் என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் திரைப்படத் தயாரிப்பு பணிகள் முதல் மக்களின் வரவேற்பு வரை பல விஷயங்கள் அடியோடு மாறத் தொடங்கியிருந்தன. அந்த காலகட்டத்தில், அர்ஜுனை தேடி வரும் தயாரிப்புகளின் எண்ணிக்கையும் அருகியிருந்தது. அவர் நடித்த படங்களும் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. அதற்கான எதிர்வினையாக, தன்னை முன்னிறுத்தும் ஒரு திரைப்படத்தைத் தானே உருவாக்க விரும்பினார் அர்ஜுன்.

அந்த வகையில்தான், ‘சேவகன்’ படத்தை இயக்கி, தயாரித்து நடித்தார். அப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த குஷ்பூ, அதில் நாயகியாக நடித்தார். அதற்கான நன்றிக்கடனாக, ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘கிரி’ படத்தை முதன்முறையாக குஷ்பூ தயாரித்தபோது, அதில் நாயகனாக நடித்தார் அர்ஜுன். திரையுலகில் இது போன்ற ‘சரியான’ கணக்கு வழக்குகளோடு வாழ்பவர்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படுவார்கள்.

Action King Arjun 40

சேவகன் படத்தைத் தொடர்ந்து பிரதாப், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி தொடங்கி சொல்லிவிடவா வரை 12 படங்களை இயக்கியுள்ளார் அர்ஜுன். இவையனைத்தும் பொழுதுபோக்கு அம்சங்களை மையப்படுத்தி உருவானவை. அதேநேரத்தில் நாட்டுப்பற்றும் அறச்சீற்றமும் கொண்ட பாத்திரங்களைக் கொண்டவை.

தொண்ணூறுகளின் பிற்பாதியில், ஒரு மொழியில் மட்டும் தொடர்ந்து நடிப்பது என்றில்லாமல் அடுத்தடுத்து வெவ்வேறு மொழிகளில் நடிக்கும் முடிவினைத் தேர்ந்தெடுத்தார் அர்ஜுன். அதற்குள்ளாக, தமிழில் அவருக்கென்று தனி ‘சந்தை’ உருவாகியிருந்தது. ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’ பெற்ற வெற்றி, அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. உண்மையைச் சொன்னால், அப்படமே அர்ஜுனை முன்னணி நாயகர்களில் ஒருவராக மாற்றியது.

அதனைத் தொடர்ந்து பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, செல்வா, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார் என்று பல முன்னணி இயக்குனர்கள் உடன் கைகோர்த்தார். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘குருதிப்புனல்’ படத்தில் கமலோடு இணைந்து நடித்தார். அப்படங்கள் மூலமாக, அவருக்கென்று ஒரு அடையாளம் உருவானது. அதனை முழுமையாக அறுவடை செய்த படம் ‘முதல்வன்’. அந்த படத்தில் நடித்தபோதும் சரி, அதற்குப் பின்னும் சரி, அர்ஜுனின் அரசியல் சார்ந்த நிலைப்பாடுகள் பொதுவெளியில் வெளிப்பட்டதே இல்லை. ஆனாலும், அந்த படம் அவரை ‘மக்கள் நாயகனாக’ முன்னிறுத்தியது. வேறு ஒரு நடிகராக இருந்தால், அந்த வரவேற்பைத் தனக்கானதாக எண்ணியிருப்பார். ஆனால், அர்ஜுன் அந்த பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை.

ட்ரெண்டிங் நாயகன்!

Action King Arjun 40

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட பாணியிலமைந்த படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறும். அதனைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற படங்களைத் தந்து வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொரு மொழி திரையுலகிலும் உண்டு. அந்த வரிசையில் ’ட்ரெண்டிங் நாயகன்’ ஆக இன்றும் தொடர்பவர் அர்ஜுன். 2000களில் தமிழ் திரையின் முகம் மாறத் தொடங்கியபோது, அவர் அதனை ஏற்கத் தயாரானார். அதனாலேயே, வசந்தின் இயக்கத்தில் ‘ரிதம்’ படத்தில் அவரால் நடிக்க முடிந்தது. பிரபு சாலமன் இயக்கிய ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, மோகன் ராஜாவின் ‘ஹனுமான் ஜங்ஷன்’, இளங்கண்ணனின் ‘ஒற்றன்’ உட்படப் பல படங்களில் அவரால் பணியாற்ற முடிந்தது.

அனுபவமிக்கவர்களோடு தான் இணைவேன் என்றில்லாமல், புதுமுக இயக்குனர்களோடு அர்ஜுன் கைகோர்த்தது மிகப்பெரிய விஷயம்.

மணிவண்ணனின் ‘கல்யாண கச்சேரி’ யாகட்டும், ராம. நாராயணனின் ’வேஷம்’ ஆகட்டும், ராஜாவின் ‘சங்கர்குரு’ ஆகட்டும்; சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அர்ஜுன் படங்கள், இன்றும் ரசிக்கும்படியாக இருக்கும். அதேபோல கோகுலம், கர்ணா, சூரியபார்வை, அரசாட்சி, மருதமலை, நிபுணன் உட்படப் பல படங்கள் காலத்தை மீறி நம்மை ரசிக்க வைக்கும்.

தொடர்ந்து நாயகனாகவும், நல்ல பாத்திரங்களைக் கொண்ட கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த அர்ஜுன், ‘இரும்புத்திரை’ மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திலேயே அதற்கான விதை விழுந்துவிட்டது என்றபோதும், அப்படத்திலேயே அது ’துருத்தல்’ இல்லாமல் அமைந்தது. அந்த பாதை மாற்றம், இன்று ‘லியோ’வில் ஹெரால்டு தாஸ் பாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு அர்ஜுனின் திரைப்பயணத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

2010க்கு பிறகு தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார் அர்ஜுன். ஆனாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சுற்றிச்சுழலும் அவரது உழைப்பு குறையவில்லை. இதுவரை இந்தியில் இரண்டொரு படங்களே நடித்திருக்கும் இவர், ‘லியோ’ வெளியீட்டுக்குப் பிறகு பாலிவுட்டில் கொடி நாட்டினாலும் ஆச்சர்யம் இல்லை.

தமிழில் அறிமுகமாகி நாற்பதாண்டுகளைத் தொட்டபோதும், இன்றும் இளமையானவராகவே நமக்கு தென்படுகிறார் அர்ஜுன். அதற்கு, திரைப்பட உலகம் மீது அவர் கொண்டிருக்கும் நேசமும், உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதையும், தனது உடல் ஆரோக்கியத்தில் அவர் காட்டும் சிரத்தையுமே காரணம்.

இன்றைய சூழலில் திரைத்துறையில் நுழைபவர்களுக்கும் வெற்றிகளைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுபவர்களுக்கும் அர்ஜுனின் அனுபவங்கள் ஏதோ ஒருவகையில் துணையாக இருக்கும். நாற்பதாண்டு காலம் நீடிப்பது மட்டுமல்லாமல், தனக்கான தனித்துவத்தின் கனத்தை மென்மேலும் அதிகரிப்பது மாபெரும் சிறப்பு. தொடரட்டும் அவரது பயணம்!

கிச்சன் கீர்த்தனா : மசாலா சப்பாத்தி!

மதுரை எய்ம்ஸ் கட்ட டெண்டர்!

தங்க நகை வாங்க போறீங்களா… சவரன் எவ்வளவு தெரியுமா?

“பிரதமர் வீடு முன்பு தான் திமுக போராட்டம் நடத்த வேண்டும்” – செல்லூர் ராஜூ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel