தொலைந்து போன அல்லது திருடு போன செல்போனை கண்டுபிடிக்க தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு மத்திய தொலைத் தொடர்பு துறையுடன் இணைந்து செயல்படவுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே செல்போன் திருட்டு என்பது அதிகரித்து வருகிறது. சில சமயங்கள் பயனர்களும் செல்போன்களை தவறவிட்டு விடுகின்றனர்.
அப்படி தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை சிலர் ப்ளாக்/ட்ரேஸ் செய்ய தவறிவிடுகின்றனர். காரணம், அதை எப்படி ப்ளாக் செய்வது என்று தெரியாததுதான்.
தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை ப்ளாக் செய்ய தெரியாதவர்கள், தற்போது தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (Central Equipment Identity Register – CEIR) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த இணையதளம் வாயிலாக செல்போனின் IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) நம்பரை பயன்படுத்தி செல்போனை ப்ளாக் செய்யலாம்.
அது எப்படி?
https://ceir.sancharsaathi.gov.in/Home/index.jsp என்ற மத்திய அரசின் இணைய தளத்துக்கு சென்றால்,
BLOCK STOLEN/ LOST MOBILE, UNBLOCK FOUND MOBILE, CHECK REQUEST STATUS ஆகிய மூன்று ஆப்ஷன்கள் இடம் பெற்றிருக்கும்.
இதில் திருடு போன அல்லது தொலைந்த செல்போன்களை ப்ளாக் செய்வதற்கு BLOCK STOLEN/ LOST MOBILE என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் மொபைல் நம்பர் 1, 2, IMEI நம்பர் 1, 2, செல்போன் ப்ராண்ட், மாடல் ஆகியவற்றுடன் செல்போன் வாங்கிய இன்வாய்ஸ் ஆகிய விவரங்களை கேட்கும்.
அதோடு செல்போனை தொலைத்த இடம், தேதி, மாநிலம், மாவட்டம், புகார் அளித்த காவல் நிலையம், புகார் எண் ஆகிய விவரங்களையும் கேட்கும்.
இந்த அனைத்து விவரங்களையும் நிரப்பிய பிறகு புகார் நகலையும் அப்லோடு செய்ய வேண்டும்.
இதையடுத்து செல்போன் உரிமையாளரின் தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
உரிமையாளரின் பெயர், முகவரியுடன் ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் குறிப்பிட்டு, ஓடிபி வருவதற்கு செல்போன் எண்ணையும் கொடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் கொடுத்து சம்மிட் கொடுத்தால் உங்களது தொலைந்த அல்லது திருடு போன செல்போனை ப்ளாக் செய்து கொள்ளலாம். அதன்பின்பு உங்களுக்கு ஒரு ஐடி கொடுக்கப்படும் அதனை வைத்து நீங்கள் உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்
இதன் மூலம், மத்திய தரவுத் தளத்தில் உங்கள் IMEI எண் பிளாக் செய்யப்படும். பின்னர் உங்கள் செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது.
அதுபோன்று மீண்டும் உங்களுக்கு செல்போன் கிடைத்தப்பின், இந்த இணையதளத்தில் உள்ள இரண்டாவது ஆப்ஷனான UNBLOCK FOUND MOBILE என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அன்பிளாக் செய்து கொள்ளலாம்.
ப்ளாக் செய்யும் போது கொடுக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ரெக்வெஸ்ட் ஐடி, மொபைல் நம்பர், அன்பிளாக் செய்வதற்கான காரணம் ஆகியவற்றை குறிப்பிட்டு அன்பிளாக் செய்து கொள்ளலாம்.
நமது மொபைலின் ஐஎம்இஐ நம்பரை தெரிந்து கொள்ள *#06 # என்ற டைப்செய்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது நாடு முழுவதும் CEIR வசதி பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் 7,42,419 செல்போன்கள் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன. 2,99,690 செல்போன்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவும் மத்திய தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து இந்த போர்ட்டலை பயன்படுத்துகிறது.
“மத்திய தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து திருடப்பட்ட மொபைல்களைக் கண்டறிய CEIR போர்ட்டலில் உள் நுழைய லாகின் ஐடியை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். தற்போது 1800 சைபர் காவல் நிலையங்களில் 1300 காவல் நிலையங்களில் இதனை கொண்டு வந்துள்ளோம்.
திருடப்பட்ட/காணாமல் போன மொபைல்கள் குறித்து புகார் வந்தவுடன் விவரங்களை உள்ளிடுமாறு காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்த போர்ட்டலில் காவல்துறை மட்டுமல்ல பொதுமக்களும் திருடப்பட்ட அல்லது தொலைந்து போன சாதனத்தின் IMEI எண்ணை கொண்டு ப்ளாக் செய்ய முடியும்.
24 மணி நேரத்தில் செல்போன் ப்ளாக் செய்யப்படும். தொடர்ந்து தொலைந்து போன செல்போனில் யாரேனும் வேறு சிம்மை ப்ளாக் செய்த போனில் பயன்படுத்தினால் அது உடனடியாக நெட்வொர்க் வழங்குநருக்கு அறிவிப்பு வரும்.
செல்போன் எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல் காவல்துறைக்கும் கைபேசியின் உரிமையாளருக்கும் தெரிவிக்கப்படும். இதன்மூலம் திருடுபோன செல்போனை கண்டுபிடிக்க முடியும்” என்று தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு கூறுகிறது.
இதுவரை, இந்த போர்ட்டலை பயன்படுத்தி தமிழ்நாட்டில் 4,057 மொபைல் போன்கள் முடக்கப்பட்டுள்ளன, 1,082 போன்கள் கண்டறியப்பட்டுள்ளன, 170 மீட்கப்பட்டுள்ளன என்று CEIR டேஷ் போர்டு தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரியா
Comments are closed.