நாளை (மே 5) ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதனை வெறும் கண்களால் காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் (2023) முதல் சந்திர கிரகணம் நாளை (மே 5) நிகழ உள்ளது. நாளை இரவு 8.44 மணிக்குத் தொடங்கி மே 6 ஆம் தேதி அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம் புறநிழல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியில் இருந்து நேர் கோட்டில், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் (total lunar eclipse) நிகழும். பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) நிகழ்கிறது.

மேலும் சந்திர கிரகணம் புறநிழல் மற்றும் உள்நிழல் என இரண்டு வகைகளாக உள்ளன. புறநிழல் சந்திர கிரகணத்தின்போது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
சூரியன் – பூமி – நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் உள்நிழல் நிலவின்மீது விழுந்து அதை மறைக்கும். அதனால் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) தெளிவாகப் புலப்படும்.
பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழாமல், அதன் புறநிழல் நிலவின் மீது விழுவது புறநிழல் நிலவு மறைப்பு எனப்படும். இதை வேறு சொற்களில் கூறுவதானால், பூமியைச் சுற்றி வரும் நிலவு, பூமியின் புறநிழல் வழியாகக் கடந்து செல்லும்.
மோனிஷா