ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கலாம், 10 கிலோ குறைக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைப்பது எந்த அளவுக்கு சாத்தியம். அதை எப்படி சாத்தியப்படுத்தலாம்?
ஒரே வாரத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் உணவுமுறையை ‘க்ராஷ் டயட்’ (Crash diet) என்கிறார்கள் ஹெல்த் டயட்டீஷியன்ஸ்.
மேலும், “இப்படி கன்னாபின்னாவென டயட்டை பின்பற்றுவதன் மூலம் உடல்நல பிரச்சினைகள் வரும். இப்படிப்பட்ட உணவுப் பழக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், தசைகளின் அடர்த்தி குறையும், எனர்ஜி அளவு குறையும், இப்படி இன்னும் நிறைய பிரச்னைகள் வரலாம்.
அது மட்டுமன்றி, இத்தகைய கறாரான, கண்டிப்பான உணவுக்கட்டுப்பாட்டை நம்மால் நீண்ட நாளைக்குப் பின்பற்றவும் முடியாது.
அதிகபட்சமாக ஒரு மாதம் பின்பற்றினாலே பெரிது. இதற்குப் பதில், சரியான, நிலையான உணவுக்கட்டுப்பாட்டைப் (sustainable diet) பின்பற்றுவதுதான் சரியானது” என்று எச்சரிப்பவர்கள், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார்கள்.
“நம்மால் நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்துச் சாப்பிடும்படியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றலாம். அதாவது, அப்படியொரு டயட்டை மூன்று, நான்கு வருடங்களுக்கு நம்மால் தொடர்ந்து பின்பற்றவும் முடியும் என்றால் அதுவே சஸ்டெய்னபுள் டயட்.
காலையில் வெறும் தோசை சாப்பிடுவதற்குப் பதில் முட்டை தோசை அல்லது கீரை தோசை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னிக்கு பதில் புதினா-கொத்தமல்லி சட்னி சாப்பிடலாம்.
இட்லி, தோசை மாவில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு போன்றவற்றைச் சேர்க்கலாம். அவற்றிலுள்ள நார்ச்சத்து எடைக் குறைப்புக்குப் பெரிதும் உதவும்.
மதிய உணவுக்கு ஒரு கப் சாதத்துடன் 2 கப் காய்கறிகள் வைத்துச் சாப்பிடலாம். நிறைய காய்கறிகள் சேர்த்த கூட்டு செய்து சாப்பிடலாம்.
வாரத்துக்கு 2 – 3 நாள்களுக்கு கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரெஷ்ஷாக துருவிய தேங்காயில் செய்த தேங்காய் சாதம், கூடவே முளைக்கட்டிய பயறு, அத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி சேர்த்த சாலட் வைத்துச் சாப்பிடலாம்.
சிறுதானியத்துடன் பருப்பும் காய்கறிகளும் சேர்த்த கிச்சடி செய்து சாப்பிடலாம்.
அடுத்து இரவு உணவு, இதற்கு அடை அல்லது பாசிப்பயறு பெசரட் சாப்பிடலாம். சப்பாத்தி, அதற்குத் தொட்டுக்கொள்ள நிறைய காய்கறிகள் அல்லது சிக்கன் அல்லது மட்டன் சைடிஷ் எடுத்துக்கொள்ளலாம்.
கோதுமை மாவுடன் சிறுதானிய மாவும் சேர்த்து சப்பாத்தி தயாரித்துச் சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பசலைக்கீரை- பருப்பு தால் சிறந்த காம்பினேஷன்.
உங்கள் மூன்று வேளை உணவுகளையும் இப்படித் திட்டமிட்டுக் கொண்டால் உங்களால் எடைக்குறைப்பில் இலக்கை எட்ட முடியும்.
அதைத் தவிர்த்து சீக்கிரமே இலக்கை அடையலாம் என தவறாக வழிகாட்டும் டயட் முறைகளைப் பின்பற்றினால், உங்களால் உங்களுக்குப் பிடித்த உணவைக்கூட சாப்பிட முடியாத நிலை ஏற்படலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்
டிஜிட்டல் திண்ணை: எம் பி சீட் அதிருப்தி… திமுக மாவட்டச் செயலாளர் ராஜினாமா?