பியூட்டி டிப்ஸ்: நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்களுக்கு ஏற்றதா?

Published On:

| By Selvam

அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகிவிட்ட சோப்பு பற்றி ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள்… எது நல்ல சோப்?

இந்தியத் தர நிர்ணய அமைவனம் சோப்புகளை இரண்டாக வகைப்படுத்தியிருக்கிறது. டாய்லெட் சோப் மற்றும் பாத்திங் பார் (Bathing Bar). நாம் உபயோகிக்கிற சோப்பை ‘டாய்லெட் சோப்’ என்றுதான் அழைக்கிறோம். அதற்கு இனிமையான நறுமணம் இருக்கும். உடலைச் சுத்தப்படுத்துவதற்கான சோப்புகள் இவை.

சோப் வாங்கும்போது அதன் பிராண்ட், விலை, வாசனை எனப் பலதையும் பார்த்து வாங்குகிறோம். முக்கியமான ஒன்றைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதுதான் டி.எஃப்.எம் (TFM).

அதாவது ‘டோட்டல் ஃபேட்டி மேட்டர்’, இதுதான் சோப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது. சோப் உறையின் மீது இது குறிப்பிடப்பட்டிருக்கும். அது 80 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், முதல்தர சோப். 60 முதல் 80 சதவிகிதம் என்றால், இரண்டாம் தரம்.

ஆனால், அவையும் குளிக்க ஏற்றவையே. டி.எஃப்.எம் குறிப்பிடப்படாத சோப்புகள் குளிப்பதற்கு ஏற்றவை அல்ல. பாத்திங் பார் என்பது 60 சதவிகிதத்துக்கும் குறைவான டி.எஃப்.எம் கொண்டது.

அத்துடன் கிளிசரின் சோப், பியூட்டி பார், ஆயுர்வேதிக் சோப் போன்று சோப்பில் நிறைய வகைகள் உள்ளன. எந்த சோப்பை வாங்குவதற்கு முன்னரும் டி.எஃப்.எம் அளவைப் பார்த்து வாங்குவது சிறந்தது.

இவை தவிர சருமப் பிரச்னைகளுக்கேற்பவும் சோப்புகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, பருக்கள் இருப்போருக்கு பென்ஸாயில் பெராக்சைடு உள்ள சோப், வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா பிரச்சினை இருப்பவர்களுக்கு ஓட்ஸ், தேன், பால் கலந்த சோப், பூஞ்சைத் தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி ஃபங்கல் சோப், பாக்டீரியா தொற்று உள்ளவர்களுக்கு ஆன்டி பாக்டீரியல் சோப்… இப்படி நிறைய உள்ளன.

கோஜிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் உள்ள சோப்புகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை. ரொம்பவும் வறண்ட சருமத்துக்கு மாயிஸ்ச்சரைசர் அதிகமுள்ள சோப் கிடைக்கிறது.

இந்த நிலையில், “அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். அடிக்கடி சோப் உபயோகிக்கிறவர்களின் சருமம் வறண்டு போகும். பருக்கள் இருப்பவர்கள் அதிகம் சோப் உபயோகிக்கவே கூடாது.

சோப் உபயோகித்ததும், அதன் பிறகு வெறும் தண்ணீரில் முகம் கழுவினால் போதும். சிலர் அதீத சுத்தம் என்கிற பெயரில் அந்தரங்க உறுப்புகளுக்குக்கூட சோப் உபயோகிப்பார்கள். உண்மையில் அந்தரங்க உறுப்புகளுக்கு சோப் உபயோகிக்கக் கூடாது. வெறும் நீரில் சுத்தப்படுத்தினாலே போதும்.

சருமத்தில் ஏதேனும் தொற்றோ, காயங்களோ, வெயிலில் அலைந்ததால் ஏற்பட்ட பாதிப்போ இருந்தால், சோப் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோப் ஃப்ரீ கிளென்சர்கள் உபயோகிக்கலாம்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நாட்டு ஊத்தப்பம்

இடப்பக்கம் சாய்ந்த இலங்கை… புரட்சி நாயகன் AKD… யார் இந்த அனுர குமார திசாநாயக்க?

வரலாற்று வெற்றி: இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திஸாநாயக்க

118 ஏக்கர் பரப்பளவில்… பசுமை பூங்கவாக மாறும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share